2020ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையில் இருந்து தப்பியோடியதாக கருதப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா அல்லது அங்கொட லொக்கா மாரடைப்பாலே உயிரிழந்ததாக இந்திய குற்றப் புலனாய்வு பிரிவு (CB-CID) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இறுதி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அங்கொட லொக்கா சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்ததைத் தொடர்ந்து பதிவு செய்த இரண்டு வழக்குகளில் ஒன்றின் விசாரணை இதன் ஊடாக முடிவடைந்துள்ளது.
இரண்டாவது வழக்கு, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தபோது அவருக்கு போலி ஆவணங்கள் ஊடாக புகலிடம் கொடுத்தது மற்றும் ஏற்பாடு செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சேரன் மா நகர் அருகே உள்ள பாலாஜி நகரில் இரண்டு வருடங்களாக “பிரதீப் சிங்” என்ற பெயரில் வாடகை வீட்டில் வசித்து வந்த “அங்கோட லொக்கா” 2020 ஜூலை 03ஆம் திகதி இரவு மாரடைப்பால் மரணமடைந்தார்.
இலங்கைப் பெண்மணி ஒருவருடன் குறித்த வீட்டில் வசிக்கும் போதே அங்கொட லொக்காக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அங்கொட லொக்காவை தனியார் மருத்துவமனைக்கு குறித்த பெண் கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அங்கோட லொக்காவின் உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு 2020ஆண்டு ஜூலை 05 அன்று தகனம் செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
N.S