இம்முறை பொசொன் நிகழ்வை விமர்சையான முறையில் கொண்டாடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான நிதி வசதிகளும் வழங்கப்படவிருப்பதாக அவர் கூறினார். அனுராதபுரத்திற்கு வருகைதரவிருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான வசதிகளும் வழங்கப்படவிருக்கின்றன. இதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவிருப்பதாக அவர் தெரிவித்தார். எதிர்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்து உரையாற்றினார்.
இதேவேளை, பொசொன் தின நிகழ்வுக்கு பூரண அரச அனுசரணை வழங்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புத்தசாசன அமைச்சின் செயலாளருடன் இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மிஹிந்தளை புனித பிரதேசத்திற்கு மாத்திரம் 31 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார். ஏனைய பொசொன் நிகழ்வுகளுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களும் வழங்கப்படவிருக்கின்றன. தேசிய பொசொன் வைபவத்திற்குத் தேவையான ஒத்துழைப்பை பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களின் ஊடாக தனிநபர்களுக்கும், அந்தரங்க விடயங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இன, மத, சமூக, கலாசார விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, மேற்கொள்ளப்படும் வெறுப்பூட்டும் கருத்துக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது. கொலை, சிறுவர் துஷ்பிரயோகம், வன்முறைகள் என்பனவற்றை அறிக்கையிடுவது பற்றி ஊடகங்கள் செயற்பட வேண்டிய முறை பற்றிய விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.