அரசியலமைப்பின் உத்தேச 21ஆவது திருத்தம் பற்றி நேற்று பேச்சுவார்த்தை

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது சில பிரதான விடயங்கள் குறித்து சகல கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வந்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானங்களின் பிரகாரம் உத்தேச 21வது திருத்தத்தில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடாகும்.
21வது திருத்தத்தின் மூலம் பாதுகாப்பு அமைச்சை மாத்திரம் ஜனாதிபதி தனது பொறுப்பில் வைத்திருப்பதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுடன் தொடர்புடைய உத்தேச சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படுமென்று அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்றைய கூட்டத்தின் போது அரசியல் கட்சிகளுக்கு இடையில் உடன்பாடு காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறினார்.
ஜனாதிபதி எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பிரதமரை நீக்க வேண்டுமாயின், அதுபற்றி பாராளுமன்றத்திற்கு அறிவித்து, பாராளுமன்றத்தின் ஊடாக அதனை நிறைவேற்றும் வகையில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறினார்.
