இந்த சந்தர்ப்பத்தில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக தீர்மானங்களை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நாடு வரலாற்றில் எப்போதும் காணாதவாறு நெருக்கடியை எதிர்நோக்கியது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் மூலம் அந்த சிரமங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. நாடு பொருளாதார ரீதியில் சிறந்த பாதையில் நுழைந்துள்ளது. பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது. அத்துடன், ஊழல் ஒழிப்புச் சட்டம் போன்ற கட்டளைச் சட்டங்களின் ஊடாக நாட்டில் சிறந்ததொரு சூழலை உருவாக்க முடியும் என இன்று தேசிய வானொலியின் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க, நாட்டை சாதகமாக முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தமது ஆதரவை வழங்கியுள்ளனர். எதிர்வரும் மூன்று மாதங்களில் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும். அதற்கான விரிவான திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது. அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.