அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தத்தை உருவாக்கி, பாராளுமன்றத்தின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் தெரிவிப்பு

அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டுமென நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கான அனுமதி பாராளுமன்றத்தில் நேற்று பெறப்படவிருந்தது. எனினும், ஒத்திவைக்கப்பட்டுள்ளமை கவலையான விடயம் என அந்த இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் சமூகத்தில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. அதில் ஜனாதிபதிக்கு பாரிய அதிகாரங்களை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அரசியல் அமைப்பின் 22ஆவது திருத்தத்தை உருவாக்கி, பாராளுமன்றத்தின் சுதந்திரத்தை நிலைநாட்ட வேண்டும் என கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவும் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் மஹாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்தார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே கரு ஜயசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.
