ஆசிரியர் சம்பள நெருக்கடிக்கு அடுத்த வருட முதல் பகுதியில் தீர்வு

பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறைமை நீக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்குள் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவிருக்கின்றன. விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் எட்டாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார். புதிதாக 26 ஆயிரம் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள். பாடசாலை உபகரணங்களின் விலையை குறைக்குமாறு உரிய தரப்புக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் உரிமைகள் பற்றியும் கவனம் செலுத்தப்படவிருக்கிறது. கல்வித் துறையில் துரிதமான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் கூறினார்.
ஆசிரியர்களுக்கான சீருடை பற்றி ஆசிரியர் ஒழுக்கக் கோவையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. முறையான தொழில்நுட்பப் பயன்பாடு இல்லாமையினால், ஆசிரியர்களின் சம்பளமும் தாமதமடைகிறது. ஆசிரியர்களின் சம்பள நெருக்கடிக்கு அடுத்த வருட முதல் பகுதியில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறையில் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 60 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 500 அதிபர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பை மேற்கொள்வதில் காணப்படும் தடைகளும் நீக்கப்படும் என்றும் அவர் கூறினார். கல்வி, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள், சமூக வலுவூட்டல் ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகின்றது.
மகளிர் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க எந்த பேதமும் இன்றி ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாத கட்டணங்களை அவர்களிடமிருந்து அறவிடுவது பொருத்தமானதல்ல என்றும், இதுபற்றி உரிய முறையில் கவனம் செலுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். கல்வித் துறையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 300 பேருக்கு இதுவரை தொழில்கள் கிடைக்கவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.
