Home » ஆரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆட்சியாளர்களை இலக்காகக் கொண்டல்ல, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக இருக்கவேண்டும் – பா.உ. ஜனா

ஆரசியலமைப்பு மறுசீரமைப்பு ஆட்சியாளர்களை இலக்காகக் கொண்டல்ல, இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாக இருக்கவேண்டும் – பா.உ. ஜனா

Source

அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சு ஆட்சியாளர்களுக்குத் தேவையான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் காட்டிய அக்கறையினை கடந்த ஆறு தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப் போன இனப்பிரச்சினையைத் தீர்;ப்பதற்கு அக்கறை காட்டியிருந்தால் உண்மையில் எமது நாடு சகல துறைகளிலும் ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்ந்திருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றையதினம் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சு, நீதி, சிறைச்சாலை அலுவல்கள், மற்றம் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய கோ.கருணாகரம்,
இன்று துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமானசேவைகள் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டுள்ளோம்.

இன்று நம் நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினை, அன்னியச் செலாவணிப் பிரச்சினை, தீர்க்கமுடியாத கடன் பிரச்சினை, கடன் கொடுத்த நாடுகளின் தீராத அழுத்தங்களால் ஏற்படும் பிரச்சனை அத்துடன், எமது நாட்டு மக்கள் இன்று எதிர்நோக்கியுள்ள அத்தனை இடர்கள், துன்பங்கள் என்பவற்றிற்க்கும் இந்த அமைச்சுக்கும் ஒரு நேர்கோட்டுத் தொடர்பு இருப்பதாகத்தான் நான் கருதுகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடக்கம் இன்று வரை இந்த அமைச்சு எமது நாட்டுக்கு சுகமாக இருந்ததை விட சுமையாக இருந்ததே ஜதார்த்தமாகும். எமது நாட்டு மக்களுக்கு இந்த அமைச்சு வளம் தந்ததை விட அவர்களது வாழ்க்கை நிலை சீரழிய காரணமானதே இந்த அமைச்சாகும். மக்களது வாழ்க்கைத்தரத்தை சீரழித்து எமது நாட்டிற்கு செலவு மிக்க வெள்ளை யானையாக இருந்த இந்த அமைச்சு அரசுத் தலைவர்களையும் அவர்கள் மனைவி, மக்கள், சோதரர்கள், உறவினர்கள் என அவர்களை வளமாக்கி வாழவைத்ததும் இந்த அமைச்சே ஆகும்.

ஒரு நாட்டின் எந்த ஒரு பாரிய பொருளாதார அபிவிருத்தித் திட்டமும் நடைமுறைப்படுத்த முன்னர், அந்தத் திட்டம் முறையாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு அந்தத் திட்டம் எமது நாட்டுக்குப் பொருத்தமானதா, இதன் மூலம் எமது நாடு நன்மை பெறுமா, இத்திட்டத்தின் மொத்த முதலீட்டையும் மேற்கொள்ளக்கூடிய நிலையில் நாம் உள்ளோமா, அதற்குரிய பொருளாதார வளமும் பலமும் எமக்குள்ளதா, அல்லது முற்றாக வெளிநாட்டுகு; கடன் திட்டங்கள் மூலம் முதலீடு செய்தால் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் இந்தக் கடனை அடைக்கப் போதுமானதாக இருக்குமா?

இந்தக் கடனானது, எவ்வளவு கால எல்லைக்குள் செலுத்த முடியும். என்பன போன்றவற்றை உள்ளடக்கிய சாத்திய வள ஆய்வு (கநயளiடிடைவைல சுநிழசவ) நடைபெற்று அதற்கான செலவு நன்மை ஆய்வு (ஊழளவ டிநநெகவை யுயெடலளளை) செய்துதான் அந்தததிட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பித்தால் தான் அந்தத்திட்டம் நாட்டுக்கும் மக்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.

ஒரு சிறிய பெட்டிக் கடைக்காரன் கூட தனது முதலீட்டை ஆரம்பிக்கும் முன்னர், தனது அனுபவத்தில் இதனை ஆராய்ந்தே தனது பெட்டிக்கடை ஆரம்பிக்கும் முடிவை எடுப்பான். ஆனால் இந்த அமைச்சுக்கள் விடயத்தில் கடந்த காலங்களில் நடந்தவை என்ன.

இந்த அமைச்சு மீதான திட்டங்களை செயற்படுத்துவதில் ஒரு வகைளில் உலக சாதனை புரிந்து, உலகத்தை வியக்க வைத்துள்ளோம். சீனா விரித்த கடன் வலையில் சிக்கி, அந்தக் கடன் மூலம் கிடைக்கவுள்ள கமிசனுக்கு ஒட்டு மொத்த நாட்டையும், ஒட்டுமொத்த மக்களையும் கடன் பொறியில் சிக்கவைத்து நீங்கள் சுகமாக. வளமாக, உளநாடுகளிலும் வெளிநாடுகளிலும் முதலீடுகளை மேற்கொண்டு அரண்மனைகளை அமைத்தும் ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றீர்கள்.

ஆனால், நாடும் மக்களும் உங்கள் முட்டாள்தனமான முதலீடுகளால் நடுத் தெருவில் நிற்கின்றார்கள்.

கப்பல் வராத துறைமுகம், விமானம் வராத விமான நிலையம் உலகில் எமது நாட்டைத் தவிர எந்த ஒரு நாட்டிலும் உள்ளதா, வளர்ச்சியடைந்த நாடுகள் கடலினை நிலமாக்கி, தம் நிலப்பரப்பை அதிகரித்து, தம் முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும் நிலையில் நாமோ நமது நிலப்பகுதியைத் தோண்டி, எமது நிலப்பரப்பைக் குறைத்து நிலத்தைக்கடலாக்கி துறைமுகத்தை உருவாக்கியுள்ளோம். இது ‘மாதன முத்தோ’ திட்டமே ஒழிய நாட்டுக்கான திட்டமல்ல. இதே போலவே, கிழக்கில் பெரும் கற்களைக் கொண்டு கடலை நிரப்பி ஒலுவில் துறைமுகத்தை பெருத்த ஆரவாரத்துடனும், ஆர்ப்பரிப்புடனும் ஆரம்பித்தீர்கள்;. ஆனால் நிலைமையோ ‘பிச்சை வேண்டாம் நாயைப்பிடி’ என்ற நிலையில் உள்ளது .

நிலமையை உணர்ந்து மீன்பிடித் துறைமுகம் என்றீர்கள். ஆனால், அப்பிரதேச மீன்படித் தொழிலாளர்கள் தமது மீன்பிடிப் படகுகளை நிறுத்தமுடியாத நிலையில் ஒலுவில் துறைமுகம் காணப்படுகிறது. ஒலுவில் துறைமுகத்தை அண்டிய இருபுறத்திலும் உள்ள கடற் கரையோர கிராமங்களும் பாரிய கடலரிப்புப்பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது,

கொழும்புத் துறைமுகம் கூட இன்று சர்வதேசப் பொறியில் சிக்கியுள்ளது. பிரபல தமிழ் சினிமா படம் ஒன்றில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் கேட்பார் ‘இப்போது சொப்பன சுந்தரியை யார் வைத்திருக்கிறார்’ என்று, இதே போல கௌரவ கப்பல் துறை அமைச்சரை நான் கேட்கிறேன். தற்போது கொழும்புத் துறைமுகத்தை யார் வைத்திருக்கிறார்கள். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஆரம்பத்தில் இந்தியாவுக்கு வழங்குவதாக ஏற்பாடுகள் இருந்தது. ஆனால், சீனாவின் அழுத்தம் இந்த முடிவினை மாற்றி சீனா நிர்மாணிக்கும் கொழும்பு துறைமுக நகரத்துக்கு அண்மை என்ற காரணத்தினால் சீனாவுக்கு கிழக்கு முனையம் தாரைவார்க்கப்பட்டது. சீனாவுக்குக் கொடுத்தால் இந்தியா பார்த்துக் கொண்டிருக்குமா. கிழக்கு முனையம் இல்லாவிட்டால் என்ன, மேற்கு முனையம் இந்தியாவிற்கு வழங்குவதனைத் தடை செய்வதில் எவ்வளவு தடைகளை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தடைகளையும் ஏற்படுத்தினீர்கள். ஆனால் நடந்தது என்னவோ, இறுதியில் அதானி குழுமத்துக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நமது நாட்டின் ஆட்சித் தலைவர்களால், அமைச்சரவையால், பாராளுமன்றத்தினால், கொள்கை வகுப்பாளர்களால் திடமான நிலையான கொள்கை வகுப்பின்மையால் அந்தந்த நேரம் அதற்குத் தக்கபடி, அந்தந்த திட்டங்களின் மூலம் தமக்குக் கிடைக்கும் கமிசன்களின் தொகைக்கேற்ப தீர்மானம் எடுப்பதனால் ஏற்படும் விளைவை, நாடும் மக்களும் அனுபவிக்கின்றார்கள். இந்த நிலைமையினால் இன்று எம்மை இந்தியாவும் முழுமையாக நம்புவதில்லை. சீனாவும் முழுமையாக நம்புவதில்லை. இத்தனைக்கும் நீங்கள் பெருமை கூறி பெருமிதம் கொள்ளும் யுத்தத்தை வெற்றிகொள்ள உதவிய நாடுகளே இவையிரண்டும். ஆனால், உங்களது தவறான கொள்கைகளால் இரு நாடுகளும் நம்மை சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றார்கள்.

எமது நாட்டின் விமான சேவையினை எடுத்துக் கொண்டால் எமது நாட்டிற்கு பாரிய பொருளாதார சுமையாக இருப்பது சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஆகும். அதே போல பாரிய அரசியல் செல்வாக்கு அரசியல் நியமனம், என்பவற்றிக்கு உட்பட்டுள்ள நிறுவனமும் இதுவாகும். சுமார் 24 விமானங்களைக் கொண்டுள்ள சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தில் ஏறக்குறைய 6500 பேர் வேலை செய்கின்றார்கள். இது அரசியல் ரீதியான நியமனங்களினால் ஏற்பட்ட சீரழிவாகும். கடந்த காலங்களில் எயார் லைன்ஸ் வேதனம் வழங்க சில பெண் ஊழியர்கள் அரச உயர் மட்டங்களினது அப்படி இப்படியான தொடர்புகளில் இருந்ததாகவும் எமது நாட்டின் வரலாறுண்டு.

கடந்த காலத்தில் சிறிலங்கன் எயார் லைன்ஸ் தலைவராக இருந்தவர் மகிந்த ராஜயபக்ச அவர்களின் மனைவி வழி உறவினராவார். இவர் மலேசியா விமான நிலையத்துக்கு தாமதமாக வந்ததினால் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நடு வானில் பறந்த எயார் லைன்ஸ் விமானத்தை, மீள மலேசிய விமான நிலையத்துக்கு வரவழைத்து விமானத்தில் ஏறிய ஒரு சாதனையும் எமக்குண்டு. அவரது மாத வேதனம் எம்மால் எண்ணமுடியாத, நினைத்தும் பார்க்கமுடியாத பல லட்சங்களாகும். இப்படியெனில் எப்படி எமது விமான சேவையில், விமானப் பயணிகள் நம்பிக்கை கொள்வார்கள். அமைச்சர் அவர்களிடம் நான் கேட்டுக் கொள்வது எமது விமான சேவை தொடர்பாக முறையான தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டிய இறுதிச் சந்தர்ப்பம் இது என்பதனை உணர்ந்து இது தொடர்பாக முறையான தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு உங்களிடமுள்ளது என்பதனை இந்த உயரிய சபை ஊடாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு காலத்தில் காங்கேசன் துறை துறைமுகம் நமக்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தந்தது. யுத்தத்தைக் காரணம் காட்டி அத் துறைமுகத்தை செயலிழக்கச் செய்தீர்கள். இதே போல தலைமன்னார் தனுஸ்கோடி பயணிகள் கப்பல் சேவை, பண்டங்கள் கப்பல் சேவை என்பனவும் எமக்கு பாரிய வருமானத்தை ஈட்டித் தந்தவைகளாகும். இதே போல பலாலி விமான நிலையமும் எமக்கு பெருமளவு வருமானத்தை ஈட்டித் தந்ததாகும். ஆனால் யுத்தத்தைக் காரணம் காட்டி அதன் சேவையையும் செயலிழக்கச் செய்துள்ளீர்கள். யுத்தம் முடிவடைந்து 13 வருடங்களுக்கு மேலாகியும் காங்கேசன் துறை துறைமுகத்தை, பலாலி விமான நிலையத்தை, தனுஸ்கோடி தலைமன்னார் கப்பல் சேவையை மீளத் தொடங்குமாறு பல தடவைகள் ஒவ்வொரு வரவு செலவுத் திட்டத்தின் போதும் எம்மால் எடுத்துரைக்கப்பட்டது. ஆனால், எதுவுமே நடைபெறவில்லை. எனது இந்த உரைக்கு அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதனை இந்த உயரிய சபையில் உரத்து உரைக்கின்றேன்.

இச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படாததற்கு என்ன காரணம். இவை தமிழர் பிரதேசங்கள் என்பதால் மட்டுமே என்பதைத் தவிர வேறு என்ன காரணத்தை நீங்கள் கூறப் போகின்றீர்கள். உங்களது இந்த நடவடிக்கையினால், பாதிக்கப்பட்டவை இச்சேவைகள் மாத்திரமல்ல. விமான நிலையங்களின் அயலில், துறைமுகங்களின் அயலில், குடியிருந்த தமிழ் மக்களின் நிலங்களும் இன்னமும் கூட மீளளிக்கப்படாது இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு என்ன நியாயம் கூறப்போகின்றீர்கள். தமிழர் கிளர்ச்சிக்கு ஒப்பாக, தெற்கில் நடந்த ஜே.வி.பி. கிளர்ச்சி காலத்தில தெற்கில் இருந்த விமான நிலையங்கள், துறைமுகங்கள், பொலிஸ் நிலையங்கள், இராணுவ முகாம்கள், அருகே இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனரா, அவர்கள் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டனவா, எவையுமே நடக்கவில்லை. ஏனெனில் அவர்கள் உங்கள் இனத்தவர்கள். உங்கள் மதத்தவர்கள், உங்கள் மொழி பேசுபவர்கள். ஆனால், எங்களுக்கு இதைச் செய்தீர்கள். ஏனெனில் உங்கள் பார்வையில் நாங்கள் பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள்.
நாங்கள் பிரிவனைவாதிகள் அல்ல, பயங்கரவாதிகளும் அல்ல. பிரிவினை கோரும் மனநிலை கொண்ட மனோவியாதி கொண்டவர்களுமல்ல. எமது கோரிக்கையை நீங்கள் இன்னமும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. எமது கோரிக்கை பிளவுபடாத ஒருமித்த நாட்டில் சமத்துவமாக வாழவேண்டும் என்பதேயாகும். ஆனால், இன்னமும் எம் மீது குரோதமும் வஞ்சனையும் கொண்ட உங்கள் கோர முகத்தையே காட்டி வருகின்றீர்கள். ஒன்றிணைந்த ஒருமித்த நாட்டில் ஒன்றாக வாழ நாம் நீட்டும் நட்புக் கரத்தை பற்றுவதற்கு இன்னும் நீங்கள் தயாராகவில்லை என்பதனைதே உங்கள் நடத்தை எங்களுக்குப் புலப்படுத்துகின்றது.

அன்று பாராளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய ஜனாதிபதியவர்கள், ஒரு பாடசாலை அதிபர் மாணவர்களிடம் வினவுவதைப்போல எதிர்க்கட்சியில் இருந்த ஒரு சில கட்சி உறுப்பினர்களிடம் நீங்கள் இனப்பிரச்சினைத் தீர்வுக்குத் தயாராக இருக்கின்றீர்களா என்று ஒவ்வொருவராக பெயரை விழித்துக் கேட்டார். அவர்களும் மாணவர்கள் போல தயார், தயார் என்று பதிலழித்தார்கள். எதிர்க்கட்சியிலிருந்து ஒரு குரல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் இதற்கு நீங்கள் தயாரா என்று வினவியது. அதற்கு அவர் 13 பிளசுக்கும் தயார் என்றார். ஏனெனில் முதல் தடவையாக யுத்தம் முடிவடைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் இலங்கை வருகை தந்த போது, அவர் முன்னிலையில் நான் 13 அல்ல. 13 பிளஸ், பிளஸ் தருவேன் என்று கூறிய 13 பிளசின் பிதாமகர் அவரே. ஆனால், எமது ஜனாதிபதி அவர்கள் உண்மையில் கேட்டிருக்க வேண்டியது அவர் அருகே இருந்த பிரதமரிடம், அவரது பக்கத்திலிருந்த சரத் வீரசேகரவிடம், இது போன்று அவர் பக்கத்திலிருந்த இன்னும் பலரிடம் இந்த வினாவினை வினவியிருக்க வேண்டும்.

இயல்பாகவே அவர் ஒரு தந்திரசாலி எந்த ஒரு வீண் பிரச்சினையிலும் தான் அகப்படமாட்டார். அதற்கேற்ப அவர், அன்று நடந்து கொண்டார். ஆனால், ஜனாதிபதி அவர்களின் இந்த வினா எழுப்பல் முடிந்து அடுத்த நிமிடத்தில், யுத்தத்தால் பெறமுடியாதவற்றை அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் மூலம் பெறும் நடவடிக்கையை நாம் முற்றாக எதிர்க்கின்றோம் என்று, அரச தரப்பிலிருந்து குரல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

இன்று திருகோணமலைத் துறைமுகத்தின் நிலை என்ன, திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்த எண்ணைக் குதங்களின் நிலை என்ன, அமெரிக்கா தொடக்கம் சீனா ஈறாக, இந்தியா வரை இவற்றை ஏதோ ஒரு வகையில் தம் வசப்படுத்தும் நடவடிக்கையில் இயங்கி வருகிறது. திருமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவம். திருமலைத் துறைமுகத்தை சர்வதேச வல்லரசுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றன. எனவே திருகோணமலைத் துறைமுகம் தொடர்பாக, அதனையொட்டிய எண்ணைக் குதங்கள் தொடர்பாக, அதனோடு இணைந்த விமான நிலையம் தொடர்பாக, நாட்டினைப் பாதிக்காத வகையில் நாட்டிற்கு நன்மை பெறத்தக்க வகையில் சர்வேத பொறியில் சிக்காத வகையில் அதே வேளை சர்வதேச நாடுகளைப் பகைக்காத வகையில் உரிய தீர்மானம் ஒன்றினை மேற்கொள்வது அரசின் கடமையாகும் என்பதனை இந்த உயரிய சபையில் நான் கூறிக் கொள்ள விரும்பகின்றேன்.

பெயருக்கு பலாலி சர்வதேச விமான நிலையம், பெயருக்கு காங்கேசந்துறை துறைமுகம், பெயருக்கு மட்டக்களப்பு விமான நிலையம் என்று இருக்காது முறையான செயற்பாட்டின் மூலம் அதன் பயனை நாடும், மக்களும் அனுபவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுங்கள்.

எனக்கொரு ஐயம் மட்டக்களப்பில் விமான நிலையம் ஒன்று உள்ளது என்பதை கௌரவ அமைச்சர் அறிவாரா என்பதேயாகும். அன்று வடக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் வவுனியா விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டுமென்று கருத்துரைத்தார். அதே போல மட்டக்களப்பு விமான நிலையத்தையும் தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வட கிழக்கு வாழ் தமிழர்கள் இன்று பெருந்தொகையாக புலம் பெயர்ந்து உலகின் அனைத்துக் கண்டங்களிலும் அனைத்து நாடுகளிலும் வாழ்கின்றார்கள். வட கிழக்கு விமான நிலையங்கள் சீராக இயங்கினால் அவர்களது வருகை மூலம் பெருமளவு அன்னியச் செலாவணியை ஈட்;ட முடியும். ஆனால் உண்மை என்னவெனில் வட கிழக்கு என்றாலே உங்களுக்கு கசக்குகிறது.

தமிழில் ஒரு பழமொழி உண்டு ‘எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை அவனுக்கு சகுனப்பிழை வேண்டும்’ அதாவது நாடோ மக்களோ எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை தமிழர்களும் தமிழர் நிலங்களும் அபிவிருத்தி அடையக் கூடாது என்பதே உங்கள் எண்ணமாகும் என்பதே இந்தப் பழமொழியின் அர்த்தமாகும். எமக்கு அன்னியச் செலாவணி வந்தாலென்ன வராவிட்டாலென்ன. பொருளாதாரம் வளம் பெற்றாலென்ன. பெறாவிட்டாலென்ன. நமது நாடு கடன் பொறியில் சிக்கி சின்னாபின்னமாகி கடன் செலுத்த முடியாத வங்குரோத்து நிலையை அடைந்தாலும் பலவாயில்லை. வட கிழக்குத் தமிழர்கள், வடகிழக்குத் தமிழ் நிலம் வளம் பெறக் கூடாது என்பதில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியாக இருந்தன என்பதை மிகுந்த கவலையுடன் இந்த உயரிய சபையில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த மனநிலை உங்களுக்கு இருக்கும் வரை எமது நாட்டை எவராலும் காப்பற்ற முடியாது. ஏன், நீங்கள் நம்பும் கௌதம புத்தர் கூட எமது நாட்டை உங்களது இந்த சிந்தனையிலிருந்து காப்பாற்ற முடியாது. வேண்டுமானால் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும் பௌத்த சூத்திரங்களை ஆளுக்காள் தமக்கேற்ற வகையில் பேசி ஆளுக்காள் தமக்கேற்றவகையில் அதனைப் பொருள் கோடல் செய்ய மட்டும்தான் முடியும். இந்நிலை தொடர்ந்து போனால் இனியும் இவ்வாறு பேசுவதற்கு எமக்கு நாடு இருக்குமோ, என்னவோ தெரியாது. இதை உணர்ந்து இதை இறுதிச் சந்தர்ப்பமாக எடுத்து எமது நாட்டின் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு மேற்கும் தெற்கும் மட்டுமல்ல, இலங்கைத் திருநாடு வடக்கும் கிழக்கும் சேர்ந்ததுதான் இலங்கை மணித் திருநாடு என்பதனை உணர்ந்து அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டை முன்னேற்றும் செயற்பாடுகளில் இணைவோம்.

சிறைச்சாலைகள் தொடர்பாக நீங்கள் சிந்திக்க வேண்டிய இடம், வெறுமனே கைதிகளை கூண்டில் அடைப்பது மாத்திரம் சிறைச்சாலைகளின் கடமையல்ல. சந்தேக நபரை, குற்றவாளிகளை, தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களை புனர்வாழ்வுக்குட்படுத்தும் இடமாகவும் சிறைச்சாலை இருக்க வேண்டும். தண்டனைகள், தவறுகளை உணர்ந்து குற்றம் செய்தவர்கள் திருந்தும் வழியினை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும். உண்மையில் இது இன்று இருக்கின்றதா? ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த முடியாத ஒரு குற்றவாளி மறியலில் வைக்கப்படும் போது ஏறக்குறைய பத்தாயிரம் ரூபா சிறைச்சாலைத் திணைக்களம் செலவு செய்யவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

சுpறைச்சாலைகளில் கைதிகளின் உணவு, சுகாதாரம், பொழுதுபோக்கு, உடல் நலம், உள நலம் தொடர்பான விடயங்களில் கரிசனை காட்டக்கூடிய விதத்தில் சிறைச்சாலைகள் தொடர்பான நியதிச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு சமூகத்தோடு இணைக்கும் செயற்பாடுகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று நாடு எதிர் கொள்ளும் முக்கிய பிரச்சினை போதைப் பொருள் வர்த்தகமும், இள வயதினரதும் பாடசாலை மாணவர்களினதும் போதைப்பொருள் பாவனையாகும். இதற்கு மரண தண்டனை விதிப்பதால் மாத்திரம் தீர்வினைக் காண முடியாது. இதற்கேற்ற வகையில் அமைச்சு இது தொடர்பான துறைசார் அமைச்சுக்களுடனும் இணைந்து உரிய திட்டங்களினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

1972ஆம் ஆண்டு முதல் எமது நாட்டில் அரசியலமைப்பு தொடர்பான அமைச்சு பல்வேறு பெயர்களில் செயற்பட்டு வந்துள்ளது. தற்பொழுது அது அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு என பெயரிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மறு சீரமைப்பு அமைச்சு ஆட்சியாளர்களுக்குத் தேவையான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் காட்டிய அக்கறையினை கடந்த ஆறு தசாப்தங்களாக நாட்டில் புரையோடிப் போன இனப்பிரச்சினையைத் தீர்;ப்பதற்கு அக்கறை காட்டியிருந்தால் உண்மையில் எமது நாடு சகல துறைகளிலும் ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்ந்திருக்கும். ஆனால், தமக்குத் தேவையான அரசியலமைப்புச் சீர் திருத்தங்களை மாத்திரம் பக்குவமாக மேற்கொண்டு நாட்டைச் சீரழித்ததைத் தவிர, நாட்டில் வெகுசனக் கிளர்ச்சி எனும் அரகலயவினை ஏற்படுத்தியதை விட இந்த அமைச்சினால் நாடு கண்ட நற்பலன் ஏதுமில்லை.

இறுதியாக எனது உரை தொடர்பாக விருப்பு வெறுப்பற்று நாட்டு மக்களின் நலன் மட்டுமே கருதிய உரையாக மட்டும் காணுங்கள். நிச்சயம் ஆசியாவின் ஆச்சரியமாக மிளிர்வோம்.
AR

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image