யாழ். செய்தியாளர். நடராசா – லோகதயாளன்.
இளைய தலைமுறையினர் பல்துறைகளில் புதுமைகளைச் செய்து புதிய தடங்களைப் பதித்து வருகின்றனர். அவர்களின் சிந்தனையோட்டம் நிகழ்காலத்தை சிறப்பாகச் சித்தரிப்பதுடன் எதிர்காலத்திற்கான புதிய பாதை மற்றும் அதற்கான வழிகளையும் காட்டுகிறது.
அவ்வகையில் ஆவணப் படங்கள் மூலம் அவர்கள் சமூகத்தில் நிலவும் பல அவலங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை வெளியுலகிற்கு எளிமையான ஆனால் அதே நேரம் காத்திரமாக வெளிக்கொண்டு வருகிறார்கள். அந்த இளைஞர்கள் பட்டாளத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் விதிவிலக்கல்ல.

அந்த பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் இம்மாதம் 22ஆம் திகதி திரையிடப்பட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட்டன. அந்த இளைஞர்களின் படைப்புகளை பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டியது.
பார்த்தேன் பிரம்மித்தேன் என்று சொல்வதே யதார்த்தமாக இருக்கும். எமது மாணவர்களின் திறமை உலகத்தரம் வாய்ந்தது. கல்வியில் யாழ் மாணவர்கள் என்றும் சிறப்பு வாய்ந்தவர்கள் எமது மாணவர்கள் மீண்டும் நிரூபித்தனர்.

இந்த ஆவணப்பட விழாவில் சமூகத்தின் பல்வேறு விடயங்களைப் பற்றிப் பேசுகின்ற பதினான்கு ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.
அவற்றுள் ஆனையிறவு உப்பளத்தின் தற்போதைய நிலை சொல்லும் ‘கடல்விளை அமுதம்’, மலையகக் கிராமமொன்றின் விளையாட்டு மைதானத் தேவையைப் பற்றிப் பேசும் ‘மைதானம்’, நீர்வேலி வாழை உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிப் பேசும் ‘வாழைக்குலைச் சங்கம்’, சூழல் மாசடைவதை ஏதோ ஒரு வகையில் குறைக்கும் வண்ணம் பழமையை வழமைக்கு கொண்டுவரும் சிறிய முயற்சி பற்றிப் பேசும் ‘மிதியுந்து’, சிற்பக்கலையில் அருகி வரும் உளிப்பயன்பாடு மற்றும் அதிகரித்து வரும் இயந்திரங்களின் பயன்பாடு பற்றிப் பேசும் ‘உளி தொடாக்கலை’, வழக்கொழிந்து போயிருக்கும் சூத்திரக் கிணறு நீர்ப்பாசன முறை பற்றிப் பேசும் ‘அழிவடைந்து போன பழமை’, ஆழக்கடலின் ஆபத்து அறியாது அதில் நீராடச்சென்று மரணித்துப்போன மூன்று சகோதரர்களின் கதை சொல்லும் ‘செம்மலையின் கண்ணீர்’, மரபு ரீதியான கால்நடை வளர்ப்பு மூலமான தற்கால தன்னிறைவுப் பொருளாதாரம் நோக்கிய நகர்வு பற்றிப் பேசும் ‘வன்னியின் ஆவுடையூர்’, நீடித்த வனையுடனான பலவர்ண ‘பற்றிக்’ உள்ளூர் உற்பத்தி பற்றிப் பேசும் ‘வானவில்’, நந்திக்கடல் மீன்பிடியின் தற்போதைய நிலை பற்றிப் பேசும் ‘நந்திக்கடல் மீன்பிடி’,மலையகப் பெண்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் வாழ்வியற் சிக்கல்களைச் சொல்லும் ‘அம்மா’, வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றாக இருந்து இன்று சிதைவடைந்திருக்கும் கீரிமலை வெளவால் புறாக்குகையின் கதைசொல்லும் ‘மறைந்திருக்கும் தொன்மம்’, மாற்றுத்திறனாளிக் கலைஞர் ஒருவரின் கலைத்துறைப் பயணம் பற்றிப் பேசும் ‘இருளொளி’, தமிழர்களின் பாரம்பரிய இயந்திரப் பொறிமுறை பற்றிப் பேசும் ‘தூய மரச்செக்கு எண்ணெய்’ ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன.

இதன்போது யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், திரைப்பட துறைசார் வல்லுநர்கள் என பலர் கலந்துகொண்டு அவற்றை திறணாய்வு செய்தனர்.
இந்த ஆவணப் படங்கள் 5-10 நிமிடங்கள் நேரம் ஓடக் கூடியவை.
அவ்வகையில் வெளியிடப்பட்ட10 நிமிட ஆவணப் படங்களில் ஆனையிறவு உப்பளத்தின் தற்போதைய நிலை சொல்லும் ‘கடல்விளை அமுதம்’ பலரின் வரவேற்பை பெற்றதனைக் காணக்கூடியதாக இருந்தது.

‘கடல்விளை அமுதம்’ ஆவணப் படத்தை உருவாக்கியவர் சுன்னகத்தைச் சேர்ந்த மாணவி பி.சிறீவித்தியா.
தற்போது 200ற்கும் குறைவானோர் அங்கு பணியாற்றினாலும் முன்பு 5,000 பேர் வரையில் பணியாற்றிய இடத்தினை தேர்வு செய்தபோது யாழில் வளங்கள் மிக குறைவாக காணப்படும் நிலையில் இனம் காணக்கூடிய வளமாக அதாவது அனைத்துப் பக்கமும் கடல் இருப்பதனால் அதனை தேர்வு செய்தேன் எனத் தெரிவித்த மாணவி சிறீவித்தியா போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான குறும்படத் தயாரிப்பு போட்டியில் பரிசையும் வென்ற மாணவியாவார்.

இந்த ஆவணப்படம் 25 ஆயிரம் ரூபா செலவில் தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவித்ததோடு இதனை தொடர்ந்து பல ஆவணப்படங்களை ஆய்வு மூலமும் வெளியிட வேண்டும் என்பதே விருப்பமாகவுள்ளது என்றார்.
இதேநேரம ஆழக்கடலின் ஆபத்து அறியாது அதில் நீராடச்சென்று மரணித்துப்போன மூன்று சகோதரர்களின் கதை சொல்லும் ‘செம்மலையின் கண்ணீர்கதையை தயாரித்து ஆவணப்படுத்திய கல்கி ஜெகநாதன் என்னும் முள்ளியவளையைச் சேர்ந்த மாணவி இந்த கதை தனது மனதை பாதித்த காரணத்தினால் தேர்வு செய்ததாகவும் அதேநேரம் இது எதிர்கால இளைஞர்களிற்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இருக்கும் என்று கருதியே இந்த விடயத்தை தேர்வு செய்தேன் என்றார்.மேலும் இதே போன்று விழிப்புணர்வு ஆவணங்கள் தயார் செய்வதை எதிர்பார்க்கின்றேன். ஆனால் அதற்கான ஒத்துழைப்புக்களே முக்கியமானது` என்றார்.

இதேபோன்று நீர்வேலி வாழை உற்பத்தியாளர் கூட்டுறவுச்சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிப் பேசும் ‘வாழைக்குலைச் சங்கம்’, என்னும் ஆவணத்தை உருவாக்கிய பி.துலக்ஷா தனது கருத்தை தெரிவிக்கையில்,
எனது பல்வேறு தேவைக்கு சென்று வந்த சமயம் இதை கண்ணுற்றேன். இதில் இருந்த தனித்துவம் கருதி இதனை ஆவணமாக்க எண்ணி 3 வார கால முயற்சியில் இதனை உருவாக்கினேன். இதனையே தொடர்ந்தும் செய்ய விரும்பினாலும. கற்றல் காலத்தில் இலங்கையிலேயே உள்ள ஒரேயொரு வாழைக் குழை உற்பத்தி சங்கத்தின் கதையை ஆவணப்படுத்தினோம். இந்த மாதிரியான ஆவணப்படுத்தலை வெளிநாடுகளிலும் காட்சிப் காட்சிப்படுத்த விருப்பினாலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. இது ஒரு புறம்எனில் ஆவணப்படத்தை தயாரிக்க நண்பரின் கமராவும் ஒரு மடிக் கணணியின் உதவியுடன் மட்டுமே மேற்கொண்டேன். அந்த வாய்ப்புகளை பெற பொருளாதார நெருக்கடி இடமளிக்கவில்லை என்றார்.

போரின் பின்னர் மாணவர்களின் முயற்சியில் வெளியான கதையில் மலையகத்தின் அவலங்களை அல்லது தேவைகளை எடுத்துக்கூற முனையும் 3 கதைகளில் மைதானம் திறமையாக தயார் செய்யப்பட்டுள்ளபோதிலும் மிகத் தரமான தலைப்பின் கதையை மேலும் சிறப்பாக வெளிப்படுத்த போய் விட்டது.
இவற்றிற்கு அப்பால் இலங்கையிலேயே உள்ள வாழைக்குலை உற்பத்தியாளருக்கான ஒரே ஒரு கூட்டுறவுச் சங்கம் தொடர்பில் ஆவணமாக்கப்பட்டுள்ள கதையும் தரமாக இருந்தன.

இதிலே அனைத்தும் மாறுபட்ட எண்ணமும் வேறுபட்ட கதைகளாக இருந்தபோதும் மூன்று இடங்களினது கதைகளை கருத்திட்ட மூன்று மாணவர்களை இங்கே இணைத்துள்ளோம்.
இந்த ஆவணப் படங்கள் வெளியீடு தொடர்பில் ஊடக கற்கைத்துறை பேராசிரியரான ரகுராமைத் தொடர்புகொண்டு கனடா உதயனிற்காக கருத்துக் கேட்டேன்.
”மாணவர்களின் முயற்சிக்கு மட்டுமே நாம் வழிகாட்டியாக இருந்தோமே அன்றி அவர்களின் உருவாக்கம், கதை தேர்வு அத்தனையும் மாணவர்களிற்கே உரியது. அத்தோடு இந்த ஆவணப்படங்கள் வெறுமனே தரத்தை மட்டும் கருதியிருந்தால் முற்கூட்டியே பரிசீலித்து உணர்வுகளிற்கு முன்னுரிமை அளித்திருக்க முடியும். ஆனால் மாணவர்களின் வளர்ச்சியை சுய ஊக்கத்தையும் கருதியதனால் எந்தவொரு மாணவர்களின் முயற்சியிலும் எமது பங்கு இருக்கவில்லை” என்றார்.

இதேபோன்று கடந்த காலத்தில் உருவாக்கிய ஆவணப் படத்தில் 2016 உருவாக்கிய யாழ் சர்வதேச திரைப்பட விராவில் சிறந்த அறிமுக திரைப்பத்திற்கான விருதை எமது மாணவரான திருச்செல்வம் திவாகர் பெற்றுக்கொண்டார் எனவும் ரகுராம் தெரிவித்தார்.
பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் காட்சிப்படுத்திய பிறைநிலா கிருஸ்ணராயாவின் நாங்களும் இருக்கிறம் கதை பெரும் வரவேற்பை பெற்றது. இதனை சர்வதேச திரைப்பட விழாவிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்படுகின்றது. இவ்வாணப் படங்கள் காட்சிப்படுத்தில் இடம்பெற்ற 14 ஆவணப்படங்களில் 12 ஐ தயாரித்தவர்கள் பெண்களாவர். இதேநேரம் இந்த மாணவர்களிற்கு தற்போது தேவையாக இருப்பது அவர்கள் உருவாக்கிய ஆவணப் படங்களை காட்சிப் படுத்தும் காட்சிக்கூட வசதிகளே ஆகும் என்றார்.
TL
