கசப்பான, விரும்பத்தகாத ஆண்டை நிறைவு செய்து, சவாலான ஆண்டை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார். அந்த சவாலான ஆண்டை வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்து, இன்று காலை சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் சுட்டிக்காட்டினார். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய நாட்டை குறுகிய காலத்தில் ஜனாதிபதி கட்டியெழுப்பியுள்ளார். இம்முறை புத்தாண்டை அனைவரும் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அரசியல் ஸ்திரமற்ற நாட்டை ஸ்திரப்படுத்த ஜனாதிபதியால் முடிந்துள்ளது. நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு புத்தாண்டில் அனைவரும் ஆதரவை வழங்க தீர்மானிப்போம் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பொதுச் செயலாளர், அனைத்துத் தேர்தல்களுக்கும் முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது கருத்தாகும் என்று தெரிவித்தார்.