நினைவேந்தல் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், இன்னோர் இனத்தை வெறுப்பேற்றும் வகையில் நினைவேந்தக் கூடாது. இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகத்தில் ஆரம்பமாகியுள்ளமை தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ரணில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
‘நினைவேந்தல் உரிமை இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் உண்டு. ஜனநாயக நாட்டில் எந்த இன மக்களினதும் உரிமைகள் பறிக்கப்பட இடமில்லை. அதேபோல் நினைவேந்தல் உரிமையையும் எவரும் தட்டிப்பறிக்கமுடியாது. வடக்கிலுள்ளவர்கள் தெற்கிலுள்ளவர்கள் ஏனைய இடங்களிலுள்ளவர்கள் தங்கள் உறவுகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் நினைவேந்தலாம். ஆனால், அந்த நிகழ்வுகளை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது ஓர் இனத்துக்கு வெறுப்பேற்றும் வகையிலோ நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடாது’ என்றார் ரணில்.