இரண்டு ஹெக்டயருக்கும் குறைந்த காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளின் கடனை முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

இரண்டு ஹெக்டயர்களுக்கும் குறைந்த நிரப்பரப்பில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் பயிர்ச்செய்கைக் கடனை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று ஆற்றிய விசேட உரையின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தத் தீர்மானம் உடன் அமுலுக்கு வருவதாக அவர் கூறினார். சிறு நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
வரையறையின்றி அரச சேவைக்கு ஆட்சேர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் வினைத்திறன் வீழ்ச்சி கண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய பிரதமர் அரச சேவையை முழுமையான திருத்தத்திற்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். பிரஜைகள் தமது வாழ்க்கை முழுவதிலும் துரிதமான செயற்றிறனான சேவையை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரச சேவையை உருவாக்குவது இதன் இறுதி நோக்கமாகும். ஊழல் மோசடி அற்ற ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது இதன் இலக்காகும். லஞ்ச ஊழல் இன்றி தவறிழைப்போர்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய ஒரு பலமான சட்டக்கட்டமைப்பைக் கொண்ட ஆட்சி முறை உருவாக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார். சுவர்ணபூமி, மகாவலி போன்ற காணி உறுதிகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு நிரந்தர காணி உறுதிகள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நகர மாடிவீடுகளில் வாடகை அடிப்படையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு சலுகை அடிப்படையில் அந்த வீடுகளின் உரிமை பெற்றுக்கொடுக்கப்படும்.
சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் மாடிவீட்டுத் தொகுதியை விரைவில் மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்த வீடுகளில் 108 வீடுகள் கலைஞர்களுக்காக ஒதுக்கப்படும். எதுவித அரசியல் அழுத்தங்களும் இன்றி பொருத்தமானவர்களுக்கு இந்த வீடுகளை இலவசமாக வழங்குவது தமது நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
