Home » இலங்கைக்கு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கவுள்ள குரங்குகள்.

இலங்கைக்கு பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கவுள்ள குரங்குகள்.

Source
ந.லோகதயாளன். இலங்கையில் தற்போது அதிகரித்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக தற்போது இலங்கையில் அதிகரித்துள்ள  குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்படுவதன்  மூலம் இலங்கைக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் என்ன என்ற  கேள்வி எழுப்பப்படுகின்றது. இலங்கையில் உள்ள குரங்குகளிற்கு சீனாவில் நல்ல கேள்விகள் உள்ளதனால் அவற்றை எடுத்துச் செல்ல சீனா விரும்புகின்றதாக  விவசாய அமைச்சில்  கடந்த 11ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் முதற்கட்டமாக இலங்கையில் இருந்து ஒரு லட்சம்  குரங்குகளை சீனாவிற்கு  வழங்குவதற்கான விசேட கலந்துரையாடலே  பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சின் அலுவலகத்தில்  இடம்பெற்றது. இலங்கையில் தற்போது   குரங்குகளின்  எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து செல்கின்ற நிலையில் விவசாய நடவடிக்கை பெரிதும் பாதிக்கப்படுவதோடு குடி மக்களும் அச்சுறுத்தலிற்கு உள்ளாவதாக தெரிவிக்கபடும் சம்பவங்கள் அதிகமாக காணப்படுகின்றது.  இவற்றிற்கு தீர்வாகவே  இலங்கையில் காணப்படும்  குரங்குகளை சீனாவிற்கு வழங்க இலங்கை அரசு  தீர்மானித்துள்ளது. இதற்கான விசேட  கலந்துரையாடலின் படி இலங்கை குரங்குகளை வெளிநாட்டுக்கு வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சர்கள் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இக் கூட்டத்தில்  தெரிவித்துள்ளார். இக் குழு குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப் பரிந்துரை  செய்தால் குரங்குகள் சீனாவிற்கு  அனுப்பி வைக்கப்படும். இதேநேரம் இலங்கையின் 25 மாவட்டங்களில் இன்று 21 மாவட்டங்களில் குரங்களின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாக தொடர்ச்சியாக முறையிடப்படுவதோடு வடக்கு கிழக்கின் 8 மாவட்டமும் முழுமையாக குரங்குகளின் தாக்குதலினால் பெரும் இழப்பைச் சந்திப்பதாகவும் வருடாந்தம் அறிக்கையிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கையின் நிலம்  மற்றும் கடல் சீனாவிற்கு வழங்கிய நிலையில் தற்போது இலங்கையில் இருந்து  குரங்குகளும் சீனாவிற்கு  ஏற்றுமதியாகவுள்ளதாக தெரியவருகின்றது. இதனால் இலங்கையில் டொலரை ஈட்ட கடல் அட்டை பண்ணை அமைத்தமைபோன்று எதிர்பாலத்தில்  குரங்கு பண்ணையும. அமைக்கப்படலாம் என்ற கருத்தும்  கூறப்படுகின்றதோடு இலங்கை அரசு சீனாவிடம் பெற்ற கடனை அடைப்பதற்கு குரங்குடன் தெரு நாய்களையும் ஏற்றும் நிலையும் ஏற்படலாம்  அதற்கும் பண்ணைகள் அமைக்க எமது அமைச்சர்கள் திட்டம் தயாரிப்பார்கள் அதனால் அந்தியச் செலவாணி ஈட்டப்படுவதாகவே கூறுவர். இலங்கை முழுவதும் விவசாயிகளிற்கு  இன்று பெரும் பிரச்சணைகளில் குரங்கு, மயில், யானை  மற்றும் தெரு நாய்களின் பிரச்சணையும் பிரதான பங்கை வகிப்பதனால் குரங்கு மற்றும் நாய் எனபவற்றை ஏற்றுமதி செய்வதனை பலரும் ஆதரிக்கும் அல்லது ஏற்றுக்கொள்ளும்  நிலையே காணப்படுன்றது. உண்மையில் இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மட்டுமன்றி பொலநறுவை, மொன்றாகலை, புத்தளம் மாவட்டங்களில் இந்த குரங்குகளின் தொல்லை அதிகரித்தமையினால் அதிக முறைப்பாடுகளும் காணப்படுகின்றதோடு ஏனைய மாவட்டங்களிலும் இந்த நிலை ஏற்படவே குரங்கு, மயில் போன்றவற்றை  சுடுவதற்கு அனுமதிக்கும் முடிவிற்கு அரசு சென்றது.  இருந்தபோதும் அவற்றை சுட்டுக்கொல்லாது உயிரோடு இன்னுமோர் இடத்திற்கு அனுப்புவதனை பலரும் வரவேற்பதோடு ஒரு மித மிஞ்சிய பொருளால் ஏற்படும் வருமானத்தை ஈட்டுவதில் தவறும்  கிடையாது என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது. குரங்கினால் தென்னை, முருங்கை, பப்பாசி முதல் விவசாய நடவடிக்கை வரையில் பாதிப்பை ஏற்படுத்தியதோடு குடியிருப்புக்களை அழிப்பதோடு சிறுவர்களின் உயிர் ஆபத்துவரை ஏற்படுத்துகின்றது. இதேநேரம் இருதரப்பையும் பாதுகாப்பதற்கு இது உகந்த திட்டமாக அமையும் என்பதோடு வயல்களில் யானையால் ஏற்படும் சேதங்களிற்கு  வழங்கும் காப்புறுதி குரங்கினால் ஏற்பட்டால் இழப்பீடும்  கிடையாது எனவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் இது தொடர்பில்  கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் சம்மேளணத்தின் செயலாளர் மு.சிவமோகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, குரங்கினால் பெரும் சேதங்களை சந்திப்பவர்கள் விவசாயிகள்தான், சிறுதாணிய உற்பத்தி இன்று  கைவிடப்படுவதற்கு மிக முக்கியமாக குரங்கு, மயில் மற்றும் பன்றிகளே காரணமாக அமைகின்றது. இதேநேரம்  தென்னையின் அழிவும் பாரிய அளவில் காணப்படுகின்றது. இவற்றினால்  சீனாவிற்கு ஒரு லட்சம் குரங்குகள் என்பது மிகச் சொற்பமானது முடிந்தால் 10 லட்சம் குரங்குகளையேனும் ஏற்றுமதி செய்தால் அவையும் ( குரங்குகளும்) உயிர்வாழும் நாமும் உயிர்வாழும் நிலை ஏற்படும்.  அரசு இதற்கு காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாக செயலில் இறங்க வேண்டும் என்றார். இதேநேரம் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் பேராசிரியர் த.ஈஸ்வரமோகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, இராணுவம், மக்கள், பெரும் முதலாளிகள் என காடுகளை அழித்தமையினால் மக்கள் வாழ்விடங்களிற்குள்  வந்த குரங்குகள் மீள செல்வதுகுறைவு. குறிப்பாக  கிளிநொச்சியின் கரையோரங்களில் யுத்தம் இடம்பெற்றபோது  சாவகச்சேரியிலும் மக்கள் இல்லாத காரணத்தால் குரங்குகள் அதிகளவில் ஊடுருவிது. அவை இன்று பெருகியுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஊருக்குள் வந்த குரங்கை பிடித்து காடுகளிலேயே விடும் சட்டமே இதுவரை காணப்பட்டது. ஓரு சில விலங்குகள் எனில் அது பொருத்தமான செயல்பாடு இன்று  எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதனால் அதனை மேற்கொள்ளவும்  பொருளாதார நெருக்கடியும் காணப்படும். நாட்டிற்கு ஆடு, மாடு, கோழி தேவையெனில் இறக்குமதி செய்யும்போது குரங்கினை சீனா இறக்கவும் இலங்கை ஏற்றுமதி செய்யவும் தீர்மானித்தால் அதில் தவறு கிடையாது. ஏனெனில் இறக்குமதி செய்வதானால் பல ஆய்வின் பின்பே அனுமதிக்க வேண்டும். இங்கே நாம் ஏற்றுமதியாளர்.  சீனா உண்மையில் பல புதிய, புதிய நகரங்களை உருவாக்குவதோடு பல பூங்காவையும் உருவாக்குவதாகவே தரவுகள் கூறுகின்றன. குரங்கினால்  இலங்கை விவசாயிகள் படும் பாடு உண்மையில் கட்டுப்படுத்த முடியவில்லை. குரங்கு, எலி எல்லாம் விவசாயிகளின் பீடையாகிவிட்டது. உண்மையில் இன்று காருண்யம் தேவையாக இருப்பினும் வீதிகளில் இறங்க முடியாத அளவிற்கு தெரு நாய் தொல்லை அதிகரித்து விட்டது. அதனால் உயிரை கொல்லாது இன்னுமோர் இடத்திற்கு கொண்டு செல்வதில் தவறு கிடையாது அதனால் பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் இதன் ஆய்வுகள் இதில் இருந்து கண்டு பிடிப்போ அல்லது உற்பத்திகளை மேற்கொள்வது என்பது இலங்கை போன்ற நாடுகளால் முடியாத காரியம்.  நகரின் மத்தியில்இருப்போர் காருண்யம், மனிதாபிமானம் என எதிர்க்கவும் கூடும்  ஆனால் மாங்காய், தேங்காய், முருங்கையில் இருந்து இந்த குரங்குகளினால் அழிவையும் இழப்பையும்  சந்திப்பவர்களே இதன் கருத்தைக்கூற 100 வீத உரிமை கொண்டவராக காணப்படுவார். குரங்கை ஏற்றுமதி எனப் பார்க்க வேண்டும் அது சீனாவிற்கு ஏற்றுமதியா எந்த நாட்டிற்கு ஏற்றுமதி என்பதற்கு அப்பால் அதனை ஏற்றலாமா ஏற்றக்கூடாதா எனப் பார்த்தால் ஏற்றுவதன் மூலமே தற்போது அதிக நன்மை பயக்கும் விடயமாகவே காணப்படுகின்றது என்றார். 1960 ஆம் ஆண்டளவில் எமது நாட்டின் தேவை கருதியும் சும்மா இருந்த நீர் நிலைகளில் தண்ணீர் பயன்பாட்டிற்கு அப்பால் அங்கே வேறு இலாபமும் அடைவதோடு நுளம்பு பெருக்கத்தையும் கட்டுப்படுத்த யப்பான் மீன் எனப்படும் திலாப்பியா வகை  மீன் யப்பானில் அன்று அதிகமாக இருந்தபோது எமக்கு தேவை என்பதனால் கொண்டு வந்தனர் அது உலக நியதியும் ஆகும். இதேநேரம் பாண்டியன்குளத்தகச் சேர்ந்த இளங்கோ கருத்து தெரிவிக்கையில் எமது பகுதி அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும் குரங்கினை ஏற்றுமதி செய்வதென்பது “நாட்டின் பொருளாதாரத்தை ஈட்ட மனிதரால் முடியாமல்போக மிருகங்களை வைத்து ஈட்ட முயற்சிக்கப்படுகின்றது” குரங்கை ஏற்றுமதி செ்வதனால் அந்த இனம் முழுமையாக அழவடையும் என நம்பவில்லை. இதனால் ஓரளவேனும் கட்டுப்பட்டால் எமக்கு மகிழ்ச்சிதான் என்றார். யாழ். மாவட்ட கமக்கார அமைப்புக்களின் தலைவர் க. தியாகலிங்கம் கருத்து தெரிவிக்கையில், விவசாய அமைச்சரிடம் நாம் இதனை பல தடவை கோரினோம். அதாவது குரங்கு, மயில், பன்றிகளால் விவசாயிகளான நாம் படும் சிரமத்தை பல தடவை கோரினோம் இதனால் ஏற்பட்ட பாதிப்பு யாழில் மட்டும் பயித்தை, தென்னை, நெல் அழிவு வருடாந்தம் 90 ஆயிரம் தேங்காயை யாழ்ப்பாணத்தில் இழக்கின்றோம். இதில்  தென்மராட்சியே அதிகம் பாதிக்கின்றது இங்கே வருடாந்தம் 90 ஆயிரம் தேங்காயை யாழ்ப்பாணம்  இழக்கின்றது எனில் நாடு பூராகவும் எவ்வளவு இழக்கப்படும். இதேபோன்று வடக்கில் வருடாந்தம் சுமார் 15 ஆயிரம் கிலோ முருங்கை, 5 ஆயரம் கிலோ பயிற்றையை இந்த குரங்குகள் நாசமாக்கின்றது. இவ்வாறு குரங்குகளை சீனாவிற்கு ஏற்றினால் விவசாயிகளிற்கு அரசு செய்த முதலாவது பெரிய நன்மைக் காரியமாக அமையும். குரக்கன், சாமி, தினை போன்றவை பயிரிடுவது குறைந்தமைக்கும் குரங்கே காரணம் என்றார். இவ்வாறு குரங்குளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக அரசு அறிவித்திருப்பது தொடர்பில் நெடுங்கேணி விவசாய அமைப்பின் தலைவர் வை.பூபாலசிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்த உலகம் மனிதனிற்கு மட்டும் சொந்தமானது அல்ல. மிருகங்களிற்கும் சொந்தமானதுதான். இருப்பினும் எதிலும் ஓர் சமநிலை வேண்டும். இங்கே எம்மை பொறுத்தமட்டில் யுத்தம் காரணமாக அதிகமானோர் உயிரிழந்தோம். அதனால் மேலும் பல லட்சம்பேர்  இடம்பெயர்வினால் மனிதர்களின் எண்ணிக்கை குறைவடைய மிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது இதன் காரணமாக குரங்கு மட்டுமல்லை யானைகளையும் ஏற்றுமதி செய்யலாம். அது சினாவிற்கு வழங்கப்படுகின்றதா அல்லது சீயன்னாவிற்கு வழங்கப்படுகின்றதா என்பது எமக்கு முக்கியம் அல்ல. ஏனெனில் யானை வாழ்நாளில் 15 ஏக்கர் காட்டை உருவாக்கும் உங்களால் முடியுமா எனக் கேள்வி எழுப்புபவர்கள் எமது பிரதேசத்தில் ஒரு மாதம் வந்து வாழ்ந்து பார்க்க வேண்டும். அரசு மேற்கொள்ளும் தவறை சுட்டிக்காட்டும் நாம் சரியானதை வரவேற்போம் அதாவது  எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்பது கிடையாது. எனவே அரசு ஒரு லட்சம் குரங்குகள் அல்ல 5 லட்சம் குரங்குகளும் வழங்கலாம் என்றார். TL
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image