இன்று மே நாள். உலகத் தொழிலாளர் சமூகமாய் ஒன்றித்த இயக்கத்தின் இரத்தம் சிந்திய புரட்சிக்கு சிக்காக்கோ உலகுக்கு அளித்த வரலாற்றின் நாள்.
உலகத் தொழிலாளர் நாள், தொழிற் சமூகத்தினுடைய நன்னாள். தொழிலாளர் வர்க்கத்தினுடைய பொருளாதார மற்றும் சமூக சாதனைகளை சிறப்பிப்பதற்கான உயர்வான நாள். மானுட உலகின் மகத்தான அம்சமாகிய உரிமைகளைப் பெறுதலும், அதற்காகப் போராடுதலும் மனித சித்தாந்தத்தின் அடிப்படை உணர்வின் சிறப்பம்சம் ஆகும். ஒவ்வொரு உயிர்களும், அது சார்ந்த கூட்டுக்களும் போராடியே மேன்மையுறுகின்றன என்பதற்கு சிக்காக்கோவின் புரட்சியும் சிறந்த அடையாளம் ஆகும். உழைப்பாளர் சமூகத்தின் கூட்டு வியர்வையும், வலிகளுமே உலகில் நறுமணம் மிக்க தேசங்களை உருவாக்கியிருக்கிறது என்பது வரலாறு. அத்தகைய உயர்வான திருநாளில் தொழிலாளர் வர்க்கத்தினரை வாழ்த்தி மகிழ்வதில் மகிழ்ச்சியும் நிறைவும் அடைகிறோம்.
உழைப்பை மூலதனமாகக் கொண்டு இயங்குகின்ற அரசுகள் முதலாளித்துவ மனநிலையும் ஆட்சி அதிகார திமிரும் உடையவையாக தமது அரசுகளை கட்டிவளர்க்கின்றன. தமது அதிகாரபீடத்தை மையமாகக் கொண்டே தொழிலாளர் நலன்களைச் சிந்திக்கின்ற அரச பீடங்களாக அவை இன்று வளர்ச்சி பெற்றிருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், தொழிலாளர்களினுடைய உழைப்பு மற்றும் உரித்துக்களை தமது மூலதனமாக்கிக்கொள்கின்ற அரசுகள் தற்போது தேசிய இனங்களுடைய சுயநிர்ணய உரித்துக்களையும் கூட்டோடு பறித்து மகிழ்கின்ற அதிகார பீடங்களாக பரிணமித்துள்ளன என்பதை உணர்ந்துகொள்வதற்கு உலகில் இலங்கைத்தீவு ஓர் உதாரணமாகும்.
அன்பான தேசத்தின் உறவுகளே! தொழிலாளர் பெருமக்களே!
கால்மாக்ஸ் அவர்கள் அன்று நினைவூட்டிய வாசகம் ஒன்றை நாங்கள் இன்று நினைவிற் கொள்வது அவசியமாகிறது. ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. பெறுவதற்கோ பொன்னான உலகம் காத்து நிற்கிறது.’ என்ற மாக்ஸின் சிந்தனை இன்றுவரை இலங்கைத் தீவிலுள்ள ஒவ்வொரு தொழிலாளர் நெஞ்சங்களிலும் ஈட்டியின் கூரென இறங்கியிருக்கிறது.
சிக்காக்கோவின் எழுச்சிக்களம் போலவே இன்று இலங்கைத்தீவு காட்சியளிக்கிறது. மிக அண்மைய காலங்களில் அறவழிப் போராட்டங்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அதிகார மையவாத தீர்ப்பானது ஜனநாயகத்தை கேலிசெய்தது. புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொழில்சார் சமூகத்தின் சகலவித போராட்டங்களையும் உரித்துக்களையும் நீர்த்துப்போகச் செய்வதற்கான ஜனநாயக முலாம் பூசிய சர்வாதிகார சட்டமாக வலம்வர இருக்கிறது.
உழைப்பை கௌரவிக்கவும், ஓய்வை வழங்கி மகிழவும் உருவாக்கப்பட்ட மே நாளில், உழைப்பே இன்றி எமது தொழிலாளர்கள் ஓய்வெடுத்துக்கொண்டுள்ளனர். உழைப்புமின்றி, வாழ்வில் உயர்வுமின்றி பொருளாதார தாழ்நிலை நோக்கிச் செல்வதற்கு எமது தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அரசபீடத்தினுடைய தவறான பொருளாதாரக் கொள்கை, நேரற்ற சிந்தனை என்பவற்றால் சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் கடனின் தயவில் நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது இன்றைய மே நாளின் துயர்மிகு பதிவாகும்.
பொருளாதாரப் பெருமந்தமும் தொழிலாளர்களின் சீவியச் சீரழிவும் அதனால் எழுந்துள்ள விளைவுகளும் தமிழ் மக்களை மாத்திரமன்றி சிங்கள, முஸ்லிம் சகோதரர்களையும் பேதமின்றி சுட்டெரித்து வருகிறது.
அன்பார்ந்த ஈழத்தின் தொழிலாளர் பெருமக்களே!
இலங்கைத்தீவு அதலபாதாளத்தை நோக்கி தனது பொருளாதாரத்தை பயணப்படவைத்துள்ள அதேவேளை, தமிழ்த் தேசிய இனத்தின் பொருளாதார வளத்தையும், பொருளாதார மேம்பாட்டையும் சிதைத்து தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணய உரித்துகளை பூரணமாக பறித்து விடுவதற்காக திட்மிட்டு செயலாற்றி வருகிறது. வடக்கு, கிழக்கு எங்கும் தமிழர் நில அபகரிப்பு பரந்துபட்ட அளவில் தொடர்ந்து வருகிறது. தமிழர் தொன்மங்களைப் பிடுங்கி எறிந்து பௌத்த கலாசாரத்தை எமது தாயகத்தில் திணிப்பதற்கு வலிமையான செயற்பாடுகள் முனைப் படைந்துள்ளன.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமது உழைப்பாளர்களை இழந்து தீரா வறுமையில் சிக்கித் தவிக்கின்றன. நீண்டகாலமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளால் அவர்களது குடும்பங்கள் பொருளாதார அந்தரத்தில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளன. கடலட்டைப் பண்ணைகளால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப் படுகிறது. கனிய வளங்கள் கட்டற்று அள்ளிச் செல்லப்படுகின்றன. பயிர் விளையும் பல்லாயிரக் கணக்கான விளைநிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தேசவழமைச் சட்டங்களை கௌரவிக்காத வகையில் அழகக தொழில் நிலையங்கள் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகின்றன. மூடப்பட்ட கைத்தொழிற் சாலைகள் மூடியபடியே உள்ளன.
போதிய தொழிலும் போதிய வருமானமும் இன்றி வறுமை மிகுந்த சமூகமாக வட கிழக்கு புள்ளி விவரங்களால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. போதையையும், வன்முறையையும் கட்டுப்படுத்த முடியாத வகையில் சட்டத்தின் ஆட்சி செயலிழந்து இருக்கிறது. மொத்தத்தில் அபிவிருத்திகள் எவையுமின்றி எல்லாவகையிலும் ஆக்கிரமிக்கப்பட்ட தேசமாக எமது தமிழீழ தேசம் உருவாக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழமைவில் தமிழ்த் தேசிய இனமாகிய நாங்கள் எமது வாழ்வுரிமையை, சுயநிர்ணய உரித்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், சிங்கள பேரினவாத சக்திகளால் எங்கள் தேசம் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும் வகையிலும், ஈழத்தமிழர்களுக்கு பாரத தேசத்தின் நீதியோ, சர்வதேச சமூகத்தின் கருணையோ கிட்டவில்லை என்பது இன்றைய மே நாளின் முதன்மைச் செய்தியாகும்.
சிக்கல் நிறைந்த வலையென தமிழர் தேசத்தையும், தேசத்து தொழிலாளர்களையும் விசேடமாக தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பையும் அழிக்கும் வகையில் பின்னப்பட்டுவரும் அதிகார சதி வலைக்கெதிராக போராடுவதே தமிழர் தேசத்துக்குள்ள ஒரே வழியாகும் என நாம் திடமாக நம்;புகிறோம். புத்திபூர்வமான செயல்முறை ஊடாக தமிழ் மக்களின் உரித்துக்களைப் பேண அயல் அரசுகளும், பன்னாட்டு அரசுகளும் தவறியே வருகின்றன. இந்நிலையில் இங்கே கூடியிருக்கும் ஆயிரம் ஆயிரம் இளைஞர்களும் தந்தை செல்வா அவர்கள் உணர்த்திய சுயாட்சி நோக்கிய பயணத்தை, ஒரு அஞ்சல் பரிமாற்ற போராட்டகாரர்களாக கையேற்க இருப்பதையே கிளிநொச்சியில் நடைபெறும் இம் மே நாள் வெளிப்படுத்தி நிற்கிறது.
அத்தகைய மே நாள் பிரகடனத்தை ஏற்று நின்றும், துணிந்து சென்றும் சாத்தியமான வழிமுறைகள் எல்லாவற்றிலும் போராடி தமிழர்களின் தாகமாகிய சுயநிர்ணய உரிமையை அடைந்தே தீருவோமென திடசங்கற்பம் கொள்கிறோம். தேச விடுதலைக்காய் உயிர்நீத்துப்போன ஆயிரம் ஆயிரம் இளவல்களுடைய கல்லறைகளின் மீதான சத்தியமாக இந்த இலட்சியப் பயணத்தைத் தொடர்வதே ஈழத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் பாதுகாப்புக்கு ஒரே வழிமுறையாகும் என்று இன்றைய மே நாள் பிரகடனம் செய்கிறது.