.
செவ்வி கண்டவர்- நடராசா லோகதயாளன்.
இலங்கையில் இருந்து நூறு ஆயிரம் குரங்குகள் சீனாவிற்கு ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் பல கருத்துக்கள் வெளிவருகின்றன. அவ்வாறு நூறு ஆயிரம் குரங்குகளை ஏற்ற முடியுமா, அதற்கான சாத்தியம் உண்டா, அதில் நன்மைகள் அதிகமா அல்லது தீமைகள் அதிகமா என வினாவைத் தொடுத்தோம்.
இவை தொடர்பில் வவுனியா பல்கலைக் கழகத்தின் வனவிலங்கு, வனச்சூழல் பாதுகாப்புத் தொடர்பான சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி சண்முகசுந்தரம் விஜயமோகன் எமக்கு வழங்கிய பதில்.
நாட்டில் எத்தனை குரங்குகள் உள்ளன என்ற கணக்கெடுப்பு இதுவரை கிடையாது. இவ்வாறு கணக்கெடுப்பு இடம்பெறாது எவ்வாறு நூறு ஆயிரத்தை ஏற்றுமதி செய்வது என்ற முடிவிற்கு வந்தனரோ தெரியாது. அதே நேரம் முதலைகள் தொடர்பான கணக்கெடுப்பு இடம்பெற்று தற்போதுதான் நிறைவுறுகின்றது.
சிறுத்தைகள் 1,500 வரையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதோடு 2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் பிரகாரம் மிக குறைந்தது 5584 யானைகள் உள்ளதாக கணக்கிடப்படுகின்றதோடு வளர்ப்பு யானைகள் 107 உள்ள அதேநேரம்
மின்னவளவில் 82 யானைகளும் உள்ளதாக அப்போது கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் மில்லியனை அண்மித்து குரங்குகள் இலங்கையில் இருப்பதாக கருதி
இதனை ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிட்டாலும் நூறு ஆயிரம் குரங்குகள் ஏற்றுமதி செய்வதென்பது ஒருபோதும் இடம்பெற முடியாத காரியம். இலங்கையில்
மெக்காக்கா சினிக்கா என்னும் இனமே அதிகமாக உண்டு இதனையே பலரும்
செங்குறங்கு என்பர் இதிலும் மூன்று இனம் உண்டு குளிர் வலயம், உலர் வலயம், இடை வலயம் ஆகிய இடங்களில் வாழும் குரங்கினங்கள் அவை. இதற்கு அப்பால் கருங்குரங்குகளில் இரு இனமும் என. குரங்கினத்தை ஒத்த தேவாங்கு என மொத்தமாகவே 4 இனங்களே உண்டு. இவை கூட்டமாகவே வாழும் இதில் நூறு ஆயிரம் குரங்கை ஏற்றுமதி என்பது ஒருபோதும் சாத்தியமே அற்றது என நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால் இதில் அரசிற்கு ஒரு சில தடை அல்ல பல தடைகளே ஏற்படும். இந்த குரங்கு ஏற்றுமதி என்பது வெறுமனே செய்தியாகவும் தகவலுமாகவே இருக்குமே அன்றி அப் பணி இடம்பெறாது. வேண்ணுமானால் ஒரு 50 அல்லது 100 குரங்கை எடுத்துச் செல்ல முடியும் அதற்கும் பெரும் செலவை எதிர்கொள்ள வேண்டும். அது சீனா போன்ற நாட்டிற்கு பெரிய விடயம் இல்லை என்பதனால் ஒரு நூறிற்கும் உட்பட்ட குரங்கை எடுத்துச் செல்வர்.
தற்போது குரங்குகள்
காடுகளில் உணவு நெருக்கடி ஏற்படுவதனால் அவை நகரை நோக்கி வருகின்றன அல்லது தோட்டங்களை நோக்கி வருகின்றது. இதனால் விவசாயிகளும் உற்பத்தியாளரும் பெரும. நட்டத்தையும் ஏற்படுத்துகின்றது என்பது மிகப் பெரும் உண்மை அதனால் இதனை கட்டுப்படுத்தவே வேண்டும். இதற்கு தடுப்பு முறைக்கு முயற்சிக்கும் ஓர் உறுப்பினராகவும் நான் தற்போது உள்ளேன்.
குரங்குகள் கூட்டம் கூட்டமாகவே வாழ்வதனால் அவற்றை பிடிப்பது சுலபமல்ல. ஒரு சில குரங்குகள் பிடிபட்டால் எஞ்சியவை அந்த இடத்தை விட்டு நகராது அல்லது சத்தம் எழுப்பினால் சிலவேளை தாக்கவும்கூடும். இவை அனைத்தையும் தாண்டி பிடித்து விட்டால் ஏற்ற முற்படும் அரச பலம் செல்வாக்கினை விடவும் மிஞ்சிய சக்தி ஒன்று உண்டு அதுதான் இந்த
மிருகங்கள் தொடர்பில் பேசுபவர்கள். அவர்கள் மிருகவதை, மனித நேயம், காருண்யம் என்றெல்லாம் பேசுவார்கள் அப்போதும் எடுபடவில்லை என்றால் மதங்களுடன் கொண்டு சென்று முடிச்சுப் போடுவார்கள் அதேநேரம் சுற்றுலாப் பயணிகளை தடுப்போம் என அரசிற்கு அச்சுறுத்துவார்கள். இவ்வாறு அச்சுறுத்துபவர்கள் அலுவலகங்களில் இருந்து உத்தரவு போடும் அதிகாரம் கொண்ட சொகுசு வாழ்க்கையை மட்டும் கொண்டவர்கள் அல்லது ஆராச்சிக்காகவும், ஆய்விற்காகவும் காடுகளில் அலைந்து படித்தவர்களாகவுமே இருப்பார்களே அன்றி குரங்கு அல்லது மிருகங்களின் தாக்குதலிற்கு இலக்காகும் பிரதேசங்களில் வாழ்வபவராக இல்லாதபோதும் அவர்களின் குரலே எடுபடும் ஏனெனில் அவர்கள் கட்டமைக்கப்பட்ட அமைப்புக்களின் தொடர்பில் இருப்பவர்கள். இதனால் ஏழை விவசாயிகளினதும் அதற்காக முயற்சித்தவர்களும் தோல்வி அடைவர். இவற்றின் அடிப்படையிலேயே நான் ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன் குரங்குகள் இலங்கையில் இருந்து சீனாவிற்கு அல்ல எங்கையுமே ஏற்றுமதி இடம்பெற மாட்டாது என.
ஏற்றுமதி இடம்பெறாதுவிட்டால் எமது நாட்டிலேயே விரைவில. விவசாயிகளோ ஊர் மக்களோ இரகசியமான முறையில் அதிக தொகையை அழிக்க முற்படுவர் என்பதும் உறுதி. தற்போது இந்த மிகப் பெரும் யானைகளையே அழிப்பவர்களிற்கு குரங்கு, மயிலை அழப்பது ஒன்றும் பெரிய விடயமாகவும் இருக்காது.
இவற்றின் அடிப்படையில் இவ்வாறான மிருகங்களை நாட்டிற்குள்ளேயே
விஞ்ஞான ரீதியில் அளிக்கும் நிலமை விரைவில் ஏற்படும். அதேநேரம் இவற்றை கட்டுப்படுத்தும் பொறிமுறையை ஏற்படுத்த முடியுமா என நாம் ஆராச்சியிலும் இறங்கி விட்டோம் என்றார்.
TL