Home » இலங்கையில் கேலிக்கூத்தாகும் தேர்தல் நடைமுறை

இலங்கையில் கேலிக்கூத்தாகும் தேர்தல் நடைமுறை

Source

நடராசா லோகதயாளன்

இலங்கையில் அரசியல்-சமூக-பொருளாதார பிரச்சனைகளும் அதன் நெருக்கடிகளும் தொடரும் நிலையில், உள்ளூராட்சி தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரையிலான பேச்சு அன்றாடம் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது .
புதிய தேர்தல் ஒன்றின் மூலமாக, புதிய ஆட்சியாளர்களோ அல்லது இப்போதைய ஆட்சியளர்கள் மக்களின் புதிய ஆணையுடனோ ஆட்சிக்கு வரும் போது மக்கள் நலன் சார்ந்த ஆக்கபூர்வமான மாற்றங்கள் வரலாம் அல்லது வரவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அன்றாடம் அதிகரித்து வருகிறது.
நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதி ஆட்சி முறையில், அந்த மாற்றம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றிலிருந்தே தொடங்க வேண்டும். சரியோ, பிழையோ மக்கள் ஆணையுடன் புதிய ஜனாதிபதியோ அல்லது புதிய ஆணையுடன் பழைய ஜனாதிபதியோ தேர்தல் மூலம் பதவிக்கு வரும் போது, நாட்டின் ஜனநாயக தன்மைக்கு ? அங்கீகாரம் கிடைக்கலாம்.
உள்ளூராட்சித் தேர்தலிற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டு வேட்பாளர் தயாரான நிலையில், அடிப்படை ஜனநாயக அலகான அந்த தேர்தலே நடைபெறுமா என்று இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. நாட்டில் நிலவிய கடும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை திசை திருப்பவே உள்ளூராட்சித் தேர்தல் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டது என்ற விமர்சனம் வலுத்து வருகிறது.
ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் என்று இப்போது கூறப்பட்டாலும் அதில் ஆயிரத்தொரு கேள்விகள் உள்ளன.
அதற்கு அடுத்த அரசியல் நிர்வாக அலகான மாகாண சபை தேர்தல்கள் பற்றி பேச்சே இல்லை. மாகாண சபை என்ற வார்த்தையே ஏதோ மோசமான வார்த்தை என்பது போல சரத் வீரசேகர போன்ற ‘தேச பக்தர்கள்’ நடந்துகொள்கின்றனர். அது என்னமோ அவரை போன்ற ‘நாட்டைக் காக்க வந்த நாயகர்களுக்கு’ 13 என்ற வார்த்தையைக் கேட்டாலே காய்ச்சல் வந்துவிடுகிறது.
அரசியல் யாப்பில் சட்டரீதியாக உள்வாங்கப்பட்டுள்ள ஒரு அம்சத்தை நிறைவேற்றுவதற்கே இந்த ’தேச பக்தர்களுக்கு’ இவ்வளவு புகைச்சல் என்றால், அவர்கள் ஜனநாயகவாதிகளா அல்லது எந்நாட்டிலும் மிகவும் புனிதத்தன்மை வாய்ந்த அரசியல் சாசனத்தை மதித்து நடப்பவர்களா என்ற கேள்வி எழுகிறது.
சரி மாகாண சபைகளிற்கான தேர்தல் பற்றி தான் பேச்சு இல்லை, அடுத்த ஆட்சி அதிகார அலகான நாடாளுமன்ற தேர்தலையாவது நடத்தி புதிய அவையை தேர்த்நெடுத்து ஜனநாயக விழுமியங்களை நிலைநாட்டி உள்நாட்டிலும் , சர்வதேச மட்டத்திலும் அங்கீகாரத்தை பெற முயல்வார்களா என்றால், அவையில் அங்கம் வகிக்கும் 225 பேரில் பெரும்பான்மையானவர்கள் தேர்தலை சந்திக்க தயாராக இல்லை. ஏனென்றால் தேர்தல் நடைபெற்றால் குறைந்தது 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் உறுப்பினர்களாகி விடுவார்கள் என்கிற அச்சம் நிலவுகிறது. எனினும் 20ஆவது சட்ட திருத்ததின் அடிப்படையில் நான்கரை ஆண்டுகளிற்கு பிறகு நாடாளுமன்றத்தை கலைக்க வழியுள்ளது. ஆனால் இப்போது பலவீனமான ஜனாதிபதியாக இருக்கும் ரணில் விக்ரமசிங்க அதைச் செய்வதற்கான வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அவரை ஆட்டிவைக்கும் மொட்டுக்கட்சியும் அதன் உறுப்பினர்களும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை இருந்தால் மட்டுமே தம்மால் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க உதவிகளைச் செய்ய முடியும் என்று ஜப்பான் உட்பட உதவி வழங்கும் நாடுகள் தெரிவித்துள்ளன. அந்த ஸ்திரத்தன்மை என்பது நாடாளுமன்ற தேர்தல் மூலமே கிடைக்கும் என்பதை ஆட்சியாளர்கள் அறிந்தும் அறியாதது போலுள்ளனர். ஆனால் இந்த பாசாங்கு நீண்டகாலம் செல்லாது என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவே செய்கிறார்கள்.
தற்போதிருக்கும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் வரை உள்ளது. 20ஆவது சட்டத்திருத்தத்தின்படி ஜனாதிபதி விரும்பினால் அதை இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கலைத்து புதிய நாடாளுமன்ற தேர்தலை அறிவிக்கில்லாம்.
நாட்டில் அதிக உட்சபட்ச அதிகார அலகு என்பது ஜனாதிபதி பதவி. அந்த அதிகார பதவியில் உள்ளவர் ‘வானளாவிய அதிகாரம்’ கொண்டவர். அவர் நினைத்தால் நாட்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஒருவரை உள்ளே தள்ளலாம், உள்ளே இருப்பவரை தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலையும் செய்யலாம். ஜெ ஆர் கொண்டுவந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இன்றளவும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. அந்த பதவியில் இருப்பவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
ஜெ ஆர் ஜெயவர்தனவை அடுத்து ரணசிங்க பிரேமதாச நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு டி பி விஜேதுங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். ஆனால் அவர் பிரேமதாசவின் கீழ் பிரதமராக இருந்தார். அவர் பிரதமரானதும் காலத்தின் சூழல்களால் தான். லலித் அதுலத்முதலி தேர்தல் காலத்தில் கொலை செய்யப்பட விஜேதுங்க பிரதமரானதே வரலாறு.
என்வே அரசியல் சாசனத்தின்படி பிரதமராக இருந்த டி பி விஜேதுங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்.
அவரை அடுத்து சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்ரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ச ஆகியோர் நேரடியாக மக்கள் மூலம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். கோத்தாபய ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவரது மூத்த சகோதரர் மகிந்த பிரதமராக நியமிக்கப்பட்டார். அரகலய போராட்டத்தை அடுத்து மகிந்த பதவி விலக, பிரதமர் பதவி வெற்றிடமாக அதற்கு ஆள் தேடும் படலம் தொடங்கியது. மொட்டுக்கட்சியிலிருந்து ஆள் கிடைக்காமல், சஜித்திற்கு தூண்டில் போட அவர் தயக்கம் காட்ட, ‘நரி’ ரணில் தான் தயார் என்று சமிஞ்சை காட்ட, 65 உறுப்பினர்களை வைத்துள்ள சஜித்தைவிட ஒற்றை உறுப்பினராக இருக்கும் ரணிலை ஆட்டிப்படைப்பது சுலபம் என்று ராஜபக்சக்கள் வீசிய வலையில் ரணில் சிக்கி,  தார்மீக நெறிகளிற்கு மாறாக பதவி ஆசையை மட்டுமே குறியாக வைத்து பிரதமராக சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
இதேவேளை கோத்தா மீதான வெறுப்புணர்வு அதிகரித்து வர அவர் ஆளை விட்டால் போதும் என்ற நிலையில், ஓடி ஒளிந்து நாட்டைவிட்டே வெளியேறினார். பின்னர் சில நாட்கள் நாடு தலையில்லாமல் இருந்தது. சிங்கப்பூரிலிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை மின்னஞ்சல் மூலம் கோத்தா அனுப்ப, அடுத்த ஜனாதிபதியை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டது. அதில் ரணிலிற்கு எதிராக டலஸ் அழகப்பெரும களம் இறங்க, சூத்திரதாரி மகிந்த காய்களை நகர்த்தி தனது அரசியல் எதிரியை ஜனாதிபதி ஆக்கினார் என்பது வரலாறு.
ஆனால் டி பி விஜேதுங்கவிற்கும் ரணில் விக்ரமங்கவிற்கும் வித்தியாசம் உள்ளது. அவர் பிரேமதாச பதவி காலத்தில் அவருக்கு அடுத்த நிலையில் அதே கட்சியில் இருந்தார். ஆனால் ரணில் நிலைமை அப்படியல்ல. அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது அவ்வளவே. ரணில் சட்டரீதியாக நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாக தேர்வானாலும், அவர் பின் வாசல் வழியாக வந்த ஜனாதிபதி என்பது தான் யதார்த்தம். அதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அதேவேளை தார்மீக ரீதியில் அவர் தன்னை நாட்டின் தலைவராக முன்னிறுத்திக்கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது. ஆனால் சட்டத்திலுள்ள ஓட்டை மறைமுகமாக அவருக்கு சாதகமாகவே உள்ளது.
இப்படியான பின்புலத்தில் அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும், புதிய தேர்தல் மூலம் ஜனாதிபதி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பரந்துபட்டளவில் குரல்கள் எழுந்தாலும் அதற்கு சட்டரீதியாக வழியில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது ஜனாதிபதித் தேர்தலை 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் நடத்துவதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லை என்று துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்துவதற்காகவே உள்ளூராட்சித் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கப்படுவதாக சில  ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் அரசியல் யாப்பு என்ன சொல்கிறது என்று நாட்டின் சில மூத்த சட்டத்தரணிகளிடம் கருத்துக் கேட்டேன்.
”2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார். அவரது பதவிக் காலம் 5 ஆண்டுகள். ஆனால், அவர் தனது பதவிக் காலத்தின் 4 ஆண்டுகள் முடிவில் அதாவது 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதற்கான அறிவிப்பை விடுத்திருக்க முடியும்.
ஆனால்  கடந்த ஆண்டு ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக கோத்தாபய பதவி விலகியமையால் நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தது. ரணில் விக்கிரமசிங்க, கோத்தாபயவின் எஞ்சிய பதவிக் காலம்வரை – 2024ஆம் ஆண்டு நவம்பர் வரையில்-பதவியிலிருக்கவேண்டும்.எனவே 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர்  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியங்கள்”.
இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதி தேர்தலை ரணில் விக்ரமசிங்கவால் அறிவிக்க முடியும். ஆனால் அவர் தார்மீக நெறிகளின்படி அப்படிச் செய்வாரா என்பதே கேள்வி.
ஆசியாவில் இலங்கைக்கு உற்ற நட்பு நாடாகவும் சுதந்திரம் அடைந்ததலிருந்து 70% காலம் இராணுவ ஆட்சி நடைபெற்ற பாகிஸ்தானில் கூட அந்நாட்டு உச்சநீதிமன்றம் மிகவும் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
”நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டியோ அல்லது திறைசேரியில் பணம் இல்லை என்று கூறியோ தேர்தலை ஒத்திப்போட முடியாது அதை செய்யவும் கூடாது”.
ஆனால் இலங்கையில்……….

TL

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image