இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். 52 மேலதிக வாக்குகளால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வெற்றி

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் 52 மேலதிக வாக்குகளை பெற்று, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் 134 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ராஜபக்ஷ பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து, ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதோடு, பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவர் பெற்றி பெற்றமையின் மூலம் நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 1977ஆம் ஆண்;டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.
ஜே.ஆர்.ஜயவர்தன இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பணியாற்றினார். இரண்டு தடவைகள் அவர் ஜனாதிபதியாக பதவி வகித்ததோடு, ரணசிங்க பிரேமதாஸ நிறைவேற்று அதிகாரம் கொண்ட இரண்டாவது ஜனாதிபதியாக 1989ஆம் ஆண்டு பதவியேற்றார்.
1993ஆம் ஆண்டு மே முதலாம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ரணசிங்க பிரேமதாஸ கொல்லப்பட்டதை அடுத்து, பிரதமர் டி.பி.விஜேதுங்க, 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை ஜனாதிபதியாக பதவியேற்றார். 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரதுங்க பதவி வகித்ததோடு, 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரை ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பணியாற்றினார்.
மைத்ரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். கோட்டாபய ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதோடு, அவர் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
