இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ஊடாக எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் ஊடாக எரிபொருளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் உரிமையாளர்கள் சங்க தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கியூ ஆர் கோட் முறைக்கு அமைய இந்த எரிபொருள் விநியோகிக்கப்படும். அதேபோல் வாகனத்தின் இலக்க தகட்டில் உள்ள கடைசி விளக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதனால் பொதுமக்களை வரிசைகளில் நிற்க வேண்டாம் என அவர் கேட்டுள்ளார். கியூ ஆர் கோடை பெற்றுக்கொண்டவர்கள் அதனை எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் காண்பிக்க வேண்டும். இது ஒரு நீண்டகால திட்டமாகும். வாகனங்களுக்கு வாரத்தில் இரண்டு தடவைகள் எரிபொருள் கிடைக்கக்கூடிய வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டை வந்தடைந்துள்ள பெட்ரோல் கப்பலின் மாதிரிகள் தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகும் என்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தூர இடங்களுக்கு ரயில்கள் மற்றும் ட்ரக் வண்டிகள் ஊடாக இலங்கை பெற்றோலிய முனைய நிறுவனம் இன்று பெட்ரோலை விநியோகிக்கும் என அவர் குறிப்பிட்டார். இதேவேளை இரண்டு டீசல் கப்பல்களில் இருந்து டீசலை தரை இறக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
