Home » இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் மனித புதைகுழிகள் குறித்த விரிவான அறிக்கை

இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் மனித புதைகுழிகள் குறித்த விரிவான அறிக்கை

Source
மன்னார் முதல் மாத்தளை வரை ஒரே கதை தான். மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன, குற்றவாளிகள் ஒரு போதும் கண்டுபிடிக்கப்படுவதில்லை, தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத கலாச்சாரம் தொடர்கிறது, அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் தலைமுறைகளாக வேதனையை அனுபவித்து வருகின்றனர். அவ்வகையில் இலங்கையின் மனித புதை குழிகளில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு எலும்புக்கூடு அல்லது எச்சங்களில், அரச பாதுகாப்பு படையினரின் தொடர்பு அல்லது அதில் அவர்கள் உடந்தையாக இருந்துள்ளமையை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. அது மக்கள் விடுதலை முன்னணியின் எழுச்சியோ அல்லது வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஆயுத போராட்டமோ எதுவாக இருந்தாலும், நிலை என்னவோ ஒன்று தான்.
யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதை குழிகளை யாராவது மறக்க முடியுமா? அது தொடர்பிலான முழுமையான விசாரணை மற்றும் நடவடிக்கை இன்றுவரை இல்லை என்பதே உண்மை. இப்போது அல்லைப்பிட்டியில் ஒரு கட்டட வேலைகள் இடம்பெறும் போது அங்கும் எலும்புக்கூடு மற்றும் இதர எச்சங்கள் காணப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பது ஊரறிந்த விடயமே. இந்நிலையில் ஐந்து மனித உரிமை அமைப்புகள் நாடு தழுவிய அளவில் நடத்திய ஒரு ஆய்வில், மனித புதை குழிகளின் பின்னணியிலுள்ள உண்மைகளை கண்டறிவதில் இலங்கை அரசின் தோல்வியை அம்பலப்படுத்தியுள்ளது. மிகவும் சிரத்தையுடன் ஆழமாக செய்யப்பட்ட இந்த ஆய்வில்- அந்த விசாரணைகள் தொடர்பில் அரசின் தொடர்ச்சியான தலையீடு சீரான வகையில் இருந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதில் உலகளவில் இலங்கை இரண்டாவது இடத்திலுள்ளது என்று ஐ நா அறிக்கை ஒன்று கூறுகிறது. அந்தளவிற்கு நாட்டில் நிலைமை மோசமாக உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதாவது நாட்டில் ஒருவர் காணாமல் போனால், அவரை கண்டுபிடிப்பது என்பது நடைபெறாத ஒன்று என்பதையே இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலான சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அல்லது தவறிழைத்தவர்கள் அரச பாதுகாப்பு படையினர் என்பதால், விசாரணைகளில் அரசியல் தலையீடு ஏற்பட்டு தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத காலாசாரம் நிலவுகிறது என்று அந்த ஐந்து நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளன. “பொறுப்புக்கூறல் என்பது கடந்த காலத்தை கையாள்வதற்கான முயற்சிகளில் அடிப்படை இடைவெளியாக உள்ளது. மேலும், தவறிழைத்தவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தபடாத வரையில், இலங்கையில் உண்மையான  நல்லிணக்கத்தையோ அல்லது நிலையான சமாதானத்தையோ எட்ட முடியாது” என்று ஐ நா மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா யூசூப் அல் நஷீப்  இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சூழல் தொடர்பிலான, தமது ஆணைக்குழுவின் வாய்மொழியான கருத்துக்களை புதன்கிழமை (21) வெளியிடும் போது தெரிவித்தார்.
நாட்டில் பல இடங்களில் மனித புதை குழிகள் இருப்பது அறியப்பட்டாலும், குறைந்தது 20 புதை குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் அவற்றை தோண்டி எடுத்து உண்மைகளை கண்டறிவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது. “மூன்று தசாப்தங்களிற்கு பிறகும் இருபது இடங்களில் முயலப்பட்ட தோண்டலிலும், ஒரு சில உடல்களே அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தீவு முழுவதும் ஆழமில்லாத பல புதையிடங்களில் பல்லாயிரக்கணக்கான உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை நாம் அறிவோம், ஆனாலும்  இந்த விடயம் தொடர்பில் ஏற்பட்டு மிகவும் சொற்ப முன்னேற்றத்தை துரதிஷ்டம் என்று தெளிவாக எம்மால் சொல்ல முடியாது- அதற்கான அரசியல் விருப்பமோ உறுதிப்போடோ இல்லை என்பதே உண்மை” என்கிறார் காணமால் போனவர்கள் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிட்டோ பெர்ணாண்டோ.
இதேவேளை, வியாழனன்று (22) கொழும்பில் முதுகுத்தண்டை உறையவைக்கும் ஆவணப்படும் ஒன்றும் இது தொடர்பில் திரையிடப்பட்டது. “தெளிவான பார்வையில்-இலங்கையின் மனித புதைகுழிகளின் பின்னால் இருக்கும் உண்மைகள்” எனும் தொனிப்பொருளில் தயாரிக்கபட்ட இந்த ஆவணப்படம்  ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் இதர பிரமுகர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டது. இதில் இலங்கையில் காணமல் போனவர்கள் மற்றும் மனித புதை குழிகள் ஆகியவை இடையேயான தொடர்பு பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நெருக்கமானவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் மூலம் தெளிவாக வெளிக்கொண்டுவரப்பட்டது. பல்வேறுபட்ட தரவுகள் மற்றும் சான்றுகள் மூலம் விசாரணைகளில் அரசின் தலையீடும் மற்றும் அதை முடிக்க முயன்ற செயல்கள் ஆகியவை வெளியுலகிறது தெரியப்படுத்தப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் கோட்டாபய ராஜபக்ச சந்தேகத்திற்குரிய பங்கு மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு மாத்தளையிலுள்ள ஒரு மனித புதை குழியிலிருந்து 155 உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டத்து தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று, பதவியிலிருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்சவை சந்தேகநபராக ஏற்கனவே பெயரிட்டுள்ளது. 1989ஆம் ஆண்டு மாத்தளையில் நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனபோது அவர்  அந்த மாவட்டத்திற்கான இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்தார். அந்த சமப்வம் தொடர்பில் தவறிழைத்தவர்கள் மற்றும் அவர் மீதான விசாரணைகள் எந்தளவில் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டு ஐ நா வலுநர்கள் இலங்கை அரசிற்கு எழுதினால் மௌனமே அதற்கு பதிலாக இருந்தது. மாத்தளையில் காணாமல் போனவர்களின் குடும்பத்தார் அங்கு காணப்பட்ட மனித புதை குழி வழக்கை மேற்கொண்டு எப்படி முன்னெடுத்துச் செல்வது என்று கூட்டாக விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த கூட்டறிக்கை வெளியானது. “ ஜே வி பி காலத்தில் இடம்பெற்ற பெரிய அளவிலான படுகொலை அட்டூழியங்கள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச உட்பட அதில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மீதான விசாரணை உரிய முறையில் நடைபெற்று சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்தால், உள்நாட்டு யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித படுகொலைகளையும், அதில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை உட்படுத்தபப்டாத நிலையையையும் தவிர்த்திருக்க முடியும். பொறுப்புக்கூறல் என்பது ஒரு தெரிவான நடவடிக்கை அல்ல, அது அனைத்து இலங்கையர்களுக்குமான எதிர்கலத்தை கட்டியெழுப்புவதாகும் ” என்கிறார் தென் ஆப்ரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயல்திட்டத்தின், தலைமைப் பணிபாளர் யாஸ்மின் சூக்கா கூறுகிறார்.
இப்படியானாவை மீண்டும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இலங்கையில் மனித புதை குழிகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் சரி, அது தொடர்பிலான விசாரணைகளின் குரல்வளைகள் நெறிக்கப்பட்டுள்ளன. “இலங்கையில் மனித புதை குழிகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் அதற்கான அரசியல் திடசங்கற்பம் முற்றாக இல்லை” என்று மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி மையத்தின் செயல் இயக்குநரும் மூத்த சட்டத்தரணியுமான கே. எஸ். ரட்ணவேல் தெரிவித்த்தார். மனித புதை குழிகள் தொடர்பில் பல குடும்பங்களிற்காக அவர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். கடந்த காலங்களில் நடைபெற்றவை தொடர்பில் அதற்கு பரிகாரம் தேடும் வகையில் இலங்கை அரசு தீவிரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதினால், அனைத்து மனித புதை குழிகள் மற்றும் தோண்டியெடுக்கபட்ட உடல்கள் தொடர்பில் பன்னாட்டு பார்வையாளர்களை அனுமதிக்கவும், அவர்களுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு செயற்பட உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. “இந்த நாட்டில் புதைப்பதில் நாம் வல்லவர்களாக இருக்கிறோம், ஆனால் உண்மைகளை தோண்டி எடுப்பதில் அந்த வல்லமை எமக்கு இல்லை” என்று இந்த அறிக்கையை இணைந்து எழுதியுள்ள, இலங்கையில் ஜனநாயகத்திற்கான செய்தியளர்கள் அமைப்பைச் சேர்ந்த பாஷன அபேவர்த்தன. குற்றங்களை ஆவணப்படுத்துவது, ஆதாரங்களை சேகரிப்பது மற்றும் அதை பாதுகாப்பது ஆகியவை இந்த புலனாய்வில் மிகப்பெரும் சவால்களாக இருந்தன என்று அறிக்கையை தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கை இலங்கையை முன்னாள் யுகோஸ்லாவியா, குவாதமாலா, ஆர்ஜெண்டினா மற்றும் ருவண்டா ஆகிய நாடுகளுடன் ஒப்பிட்டது. அந்த நாடுகளிலும் வெற்றிகரமாகஇவ்வாறு மனித புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உடல்கள் தோண்டி எடுக்கபட்டாலும், உரிய விசாரணைகள் நடைபெற்று, உடல்கள் அல்லது உடல் எச்சங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டன. “அது உண்மையில் இலங்கையில் நடைபெறாதற்கு காரணம் அதற்கான வல்லமை அவர்களிடம் இல்லை என்பதில்லை ஆனால் மாறாக அங்கிருக்கும் கட்டமைப்பு அதை அனுமதிப்பதில்லை” என்று இந்த ஆய்வறிக்கையின் மற்றொரு எழுத்தாளரான இங்கிரிட் மஸாஜ் கருத்து வெளியிட்டுள்ளார். இலங்கையில் போதியளவில் சட்டம் மற்றும் கொள்கை ரீதியில் நடைமுறை படுத்தக்கூடிய கட்டமைபுகள் இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு நாடு முழுவதிலும் காணாமல் போனவர்கள் அல்லது  முறையான அனுமதியின்றி பொருட்கள் (எச்சங்கள்) அகற்றப்பட்டவை தொடர்பில் சில சீரமைப்புகளைச் செய்ய ஐ நாவின் செயற்குழு பரிந்துரை செய்திருந்தது. மரண விசாரணை தொடர்பில் புதிய சட்டமொன்றும் நிலையான வழிகட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை, அல்லது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் கலந்தாலோசிக்கபடவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்கிறது இந்த ஐந்து மனித உரிமைகள் அமைப்பின் நாடு தழுவிய ஆழமன ஆய்வறிக்கை. கடந்த காலங்ளில் இடம்பெற்றவைகளிற்கு பரிகாரம் தேடுவதற்கு, இனி எந்த மனித புதை குழி தோண்டி ஆராயப்பட்டாலும், அதன் போது  சர்வதேச பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் இந்த ஐந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. பொறுப்புக்கூறல் தொடர்பில் புதன்கிழமை ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் அதன் பிரதி ஆணையர் தெரிவித்த கருத்துக்களுடன் எதிரொலிக்கிறது. AR
What’s your Reaction?
0
0
0
0
0
0
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image