Home » ஈழத்திற்கு இருந்த துணிவு இந்தியாவிறகு இல்லாமல் போனது ஏன்?

ஈழத்திற்கு இருந்த துணிவு இந்தியாவிறகு இல்லாமல் போனது ஏன்?

Source

 நடராசா லோகதயாளன்.

”இலங்கை மாதிரியான ஒரு வங்குறோத்துள்ள சிறிய நாடு சீனவின்  கப்பலை அனுமதித்தமை புதுடில்லியின் கன்னத்தில் அடித்தமை போன்றது” –  என்று பிரம்மா செல்லானி- போன்று சர்வதேச மட்டத்தில் மதிக்கப்படும் இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்களே கூறும்  அவலத்திற்கு இந்திய பாதுகாப்பு தற்போது தள்ளப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பாதுகாப்பு இன்று இலங்கை என்னும் சிறு நாட்டில் ஏலம் விடப்படும் நிலைமையில் உள்ளது என்பதை ஈழத்தழிமர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே எதிர்வுகூறினர். அதனை தடுக்க வேண்டுமானால் இந்தியா விரும்பியோ விரும்பாமலோ ஈழத்தின்பால் செயல்பட வேண்டும் என்ற கருத்து 1983 ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தப்பட்டாலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்குமான இடைவெளியை அதிகரித்தது. 

இருந்தபோதும் ”இந்தியா எம்மை பகையாக கருதினாலும் ஈழத்தமிழர்களை பகையாக கருத மாட்டாது அதனால் இந்தியாவின் பகைவர்கள் இலங்கையை அண்ட முடியாது” என்றே விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உறுதியாக கூறிவந்தார்.   

கொண்ட கொள்கைகளிலிருந்து என்றும் மீறாதவர்கள் என்று இன்றளவும் அறியப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவிற்கு பாதகம் ஏதாவது ஏற்படும் என்று கருதினால் அதற்கு எதிராக குரல் கொடுக்கவும், நடவடிக்கை எடுப்பதற்கும் தயங்கியதில்லை. அந்த விடயத்தில் பிரபாகரன் அவர்கள் மிகவும் தீவிரமாக இருந்தார்.

 இதற்கு பல உதாரணங்களை கூற முடியும். 

அதில் ஒன்று  1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்து புலிகள் வன்னிக்கு பின்வாங்கிய காலத்தில் முல்லைத்தீவு நகரில் சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினருடன் இருந்த இராணுவ முகாம் இலக்கு வைக்கப்பட்டு முழுமையாக புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டு இரு மாத இடைவெளியில்- அதாவது 1997 ஆண்டு செப்ரெம்பர் மாதம் 09ஆம் திகதி  சீனாவின் ஒரு கப்பல் மீது புலிகள் அஞ்சாது தாக்குதல் தொடுத்த துணிகரச் சம்பம் இடம்பெற்றது. 

அந்த சந்தர்ப்பத்தை இப்போது நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். இலங்கை கடற்படையின் கப்பல் என எண்ணியே அதை விடுதலைப் புலிகள் அதன் மீது முதலில் தாக்குதல் திட்டமிடப்பட்டபோதும் பின்னர் அது சீனக் கப்பல் என்று  இனம்கானப்பட்டது. இதனால் தாக்குதலைத் தவிர்க்க எண்ணியபோது விடுதலைப் புலிகளின் தலைமை இரு காரணத்திற்காக அதன்மீது தாக்குதலை மேற்கொள்ள இணங்கியமை பின்னர் அறிய முடிந்தது.  

”அதாவது  சீனா இந்தியாவின் பகைமைநாடு அதில் சில நேரம் ஆயுதம் எடுத்து வரப்படலாம் என்பது முதலாவது விடயம்  இரண்டாவது எமது வளத்தை சுரண்ட எவர் முற்பட்டாலும் இதுவே முடிவு என்றதன் அடிப்படையில் அந்த நடவடிக்கை ” என்று புலிகள் தலைமைப்பீடம் முடிவெடுத்தது.  சீனா என்பது எவ்வளவு பெரிய நாடு என்ற அச்சம் அற்ற துனிவு  எவருக்கும் இல்லை என்பதன் வெளிப்பாடே இன்று  இந்தியா இவ்வாறு ஆபத்தில் சிக்கி தவிக்கின்றது என்பதே பிரம்மா செல்லானி உட்பட பல பாதுகாப்பு ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகவுள்ளது. 

1997 ஆம் ஆண்டு புல்மோட்டையில் உள்ள இல்மனைற் தொழிற்சாலையில் இருந்து கனிய வளத்தை ஏற்ற வந்த சீனக் கப்பல் மீது புலிகளின் தாக்குதல் இடம்பெற்றது. இவ்வாறான காரணி அன்றே இந்தியாவிற்கான பாதுகாப்பு வேலியாக அமைந்தது. 

பொருளாதார நெருக்கடியால் இன்று  திரிசங்கு நிலையில் இலங்கை உள்ளது. இந்த சூழலில்தான் வரும் ஆனால் வராது என பூச்சாண்டி காட்டிய யுவாங்-05 தாமதமானாலும் இலங்கைக்குள்  வந்து விட்டது  என்பதன் மூலம் பாரிய அச்சுறுத்தல் இந்தியாவிற்கு விடப்பட்டுள்ளது  என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. 

சீனாவின் யுவாங்-05 , பாகிஸ்தானின் தைமூர்  இலங்கை நோக்கி  புறப்பட்ட ஒரு சில நாள்களிலேயே இந்த தகவல்கள்  இந்தியாவின் தரப்பிற்கு சென்றுவிட்டது. ஆனால் இந்தியத் தரப்பு இலங்கை நம்மைமீறி எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற அளவிற்கு மீறிய நம்பிக்கையில் இருந்தனர். அந்த நம்பிக்கையை  பொய்யாக்கி இந்தியாவின் பகை நாடு இரண்டும் தமது கடற்படை கப்பல்களை இலங்கைத்  துறைமுகங்களுக்கு கொண்டு வந்தன.

பாகிஸ்தான்  கடற்படையின்  தைமூர் கப்பலைவிட சீனாவின் கப்பலின் அளவும் சக்தியும் மிகப் பெரியது.  இந்த கப்பல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசிடம்  ஜூன் மாதம்  28 ஆம் திகதியே  உத்தியோகபூர்வமாக அனுமதி  கோரப்பட்டது.  இதற்கு  ஜூலை மாதம்  12 ஆம் திகதி அனுமதிக்கான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.  ஜூலை 14 அன்று வெளிவிவகார அமைச்சினால் உறுதியான  அங்கீகாரம் அளித்த  நிலையில் கப்பலின் பயணம் உறுதி செய்யப்பட்டது.  எனினும் இக்காலப்பகுதியில் இந்தியா அந்த வருமையை அறிந்துகொண்டதா, ஆம் என்றால் எப்படியான எதிர்வினையை முன்னெடுத்தது என்பது தெளிவாகவில்லை. 

இதனையடுத்து ஜூலை மாதம் 21 ஆம் திகதி சீனாவில் இருந்து யுவாங்-05 இலங்கை நோக்கிப் புறப்பட்டது. அப்போது விழித்துக்கொண்ட இந்தியா சீனாவின் விண்வெளி மற்றும் செய்மதி ஆராச்சிக் கப்பலின் இலங்கை வருகையை கட்டுப்படுத்த துடிதுடித்தது. அதற்காக இலங்கை மீது உச்சபட்ச இராஜதந்திர அழுத்தங்களை உபயோகித்தும் முயற்சி வெற்றியளிக்காத நிலையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை காண்பித்து மிரட்டியது. 

இந்தியாவின் அச்சுறுத்தலால்  கப்பலின் வருகையை  ஒத்திவைக்குமாறு இலங்கை  வெளிவிவகார அமைச்சு சீன தூதரகத்திற்கு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி  உத்தியோகப்பூர்வமாக எழுத்தில்  அறிவித்தது. 

கப்பல் வருவதற்கு மூன்று நாட்களே எஞ்சியிருந்த  நிலையில் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தினால் சீனக் கப்பலுக்கு அறிவிக்கப்பட்டது.  ஆனால், அதே பொருளாதார நெருக்கடியை காண்பித்து சீனாவும் இலங்கையை மிரட்டியது. இதனால் திரிசங்கு நிலைமைக்கு உள்ளானது இலங்கை அரசு. 

அதேவேளை எதிலும் அரசியல் செய்யும் மகிந்த தரப்பு இந்த விடயத்திலும் அதைச் செய்யத் தவறவில்லை. அதாவது இந்த அனுமதி ஏதும் தமக்குத் தெரியாது ஜீ.எல்.பீரிஸ்தான் வழங்கிவிட்டுச் சென்றுவிட்டார் எனக் கூற முற்பட்டது. 

சீனாவின் அதிநவீன  செயற்கைக்கோள் ஆய்வு கப்பலான இந்த  ‘யுவான் வாங் 5’ கப்பல் 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது.  இந்த  கப்பல் 11 ஆயிரம் தொன் எடைகொண்ட பொருட்களை சுமக்கும் வல்லமையும்  கொண்டது. கடல் சார் கண்காணிப்பு, செயற்கை கோள் தொழில்நுட்பத்தை கொண்டதுடன் 750 கி.மீ. சுற்றளவுக்கு இருக்கும் ஒவ்வொன்றையும் துல்லியமாக ஆய்வு செய்ய முடியும் எனவும் கூறப்படுகின்றது. 

அமெரிக்க உதவியை நாடிய இந்தியா.

சீன கப்பலைத் தடுக்க 

கடும் முயற்சி செய்தும் தமது பிடி கைநழுவி சீனாவின் கையே ஓங்கும் என்பதனை அறிந்த இந்தியா அவசர அவசரமாக அமெரிக்காவின் உதவியினையும் நாடியது. இதற்காகாக உடனடியாக இந்தியாவின் கோவாவினை அண்டிய பகுதிக்கு  அமெரிக்காவின் கப்பல் ஒன்றும் திருப்பப்பட்டது. 

செய்மதி மற்றும் விண்வெளி ஆய்வுக்குரியது எனக் கூறப்பட்ட கப்பல் சீனாவிலிருந்து புறப்படும்போது 40 கி.மீ வேகத்தில் புறப்பட்டது. அதன் பின் தாய்வானிலிருந்து 35 கி.மீ வேகத்திலும் இலங்கையை அண்டிய கடற்பரப்பினை அண்மித்தபோது  6 கி.மீ ஆகவும் காணப்பட்ட நிலையில் 14 ஆம் திகதி  3 கி.மீ வேகத்திலும் காணப்பட்டது. இதன் பின்பே 16 ஆம் திகதி காலையில்  அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்துள்ளது. 

யுவாங் 05 விடயத்தில் சீனா மற்றும் இந்தியாவின இராஜதந்திர அழுத்தங்களை ஒப்பிடும் போது சீனாதான் பலமாக அழுத்தியுள்ளது என்பதோடு இந்தியாவிற்கு இராஜதந்திர தோல்வி என்பது  வெளிப்படையாகி விட்டது. இச்சம்பவம் இந்தியாவின் விடயத்தில் ஈழத் தமிழர்களின் நிரந்தர இருப்பே இந்தியாவின் திடமான பாதுகாப்பு என்பது இந்தியாவிற்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதோடு ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிக கரிசணை செலுத்த வேண்டும என ஈழத் தமிழர்கள் கருதுகின்றனர். 

இந்திய பாதுகாப்பு விடயங்களில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் ஆய்வாளரான பிரம்மா செல்லானி இந்த சீனக கப்பல் வந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள விடயமானது 

”இந்தியாவின் முகத்தில் அறைந்த இலங்கை”

”இலங்கை மாதிரியான ஒரு வங்குறோத்துள்ள சிறிய நாடு சீன கப்பலை அனுமதித்தமை புதுடில்லியின் கன்னத்தில் அடித்தமை போன்றது. இது இராஜதந்திர ரீதியிலான அறை  எனவும்  குறிப்பிட்டுள்ளதோடு இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின்  தோல்வியும் இந்தியாவின் கொல்லைக்குள்ளேயே சீனா  செல்வாக்கு செலுத்தியுள்ளதையும் எடுத்துக் காட்டுகிறது”. என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இலங்கைக்கு இந்தியா கடந்த 18 மாதங்களிற்குள்  3.8 பில்லியன் டொலர் உதவி புரிந்துள்ளது.  இருந்தபோதும் இலங்கை இந்தியாவிற்கு அழுத்தம் வரும் செயலை அதிகமாக மேற்கொண்டால்தான் அதிக உதவி கிட்டும் என்ற தந்திரத்தை இலங்கை கையாள்கின்றதோ தெரியவில்லை. 

கப்பல் விடயத்தில் கோட்டைவிட்ட இந்தியா, இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் ஒரு நடவடிக்கையாக இலங்கைக்கு கண்காணிப்பு விமானம் ஒன்றை அளித்துள்ளது. ஆனால் இதற்கான வேண்டுகோள் 2018 ஆம் ஆண்டு விடுக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இப்போது ஏன் நடவடிக்கை?

அவ்வாறு வழங்கப்பட்ட டோர்னியர் விமானத்தை இயக்கவென இந்திய விமானப்படையின் 15 அதிகாரிகள் 4 மாதங்கள் இலங்கையிலேயே தங்கவுள்ளனர். இவ்வாறு தங்கியுள்ளவர்கள் இந்த விமானம் மூலம் சீனாவின் கப்பலையும் முதல்கட்டமாக கண்காணிப்பதன் மூலம் சீனாவின் கப்பலை இலங்கைக்குள் விட்டு சீனாவை திருப்திப்படுத்திய இலங்கை அரசு அதனை கண்காணிக்கும் வல்லமை கொண்ட இந்தியாவின்  விமானத்தையும் இலங்கைக்குள் விட்டு இந்தியாவையும் திருப்திப்படுத்தியதா என்ற பலமான கேள்வியும் எழுந்தாலும் அதில் இந்தியா திருப்திகொள்ள முடியாது என்பதோடு இலங்கையின் தந்திரமே மேலும் வெற்றி கண்டது என்பதே பொதுவான கருத்தாகவுள்ளது.

இரட்டைக் குதிரை சவாரி ஆபத்தானது என்றாலும், கேந்திர ரீதியாக முக்கியமான இடத்தில் இருக்கும் இலங்கை, இந்தியா தம்மை கைவிடாது, விடவும் முடியாது என்று திடமாக நம்புவது போலத் தோன்றுகிறது. அதேவேளை ஐ நா தீர்மானங்களை சமாளிக்க சீனாவின் ஆதரவு இன்றியமையாதது அதேவேளை இந்தியாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனா என்கிற பூச்சாண்டி அவசியம் என்று இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் நம்புகின்றன.

சீனாவின் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் பங்குகொண்ட சீனத் தூதுவர் கருத்துரைக்கும்போது இது போன்ற கப்பல் வருவது இது முதல்தடவை அல்ல 2014ஆம் ஆண்டும் வந்த்தாக குறிப்பிட்டதோடு இந்தியாவின் எதிரப்பினால்தான் தாமதம் ஏற்பட்டதா என்ற கேள்விக்கு அது இயற்கையானதே எனவும் பதிலளித்தார்.
TL

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image