உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கப்படுமாக இருந்தால் அது எவ்வாறான முறையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்குவதற்கு ஏதுவாக, பாதிக்கப்பட்ட மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளோடு இன்று கலந்தாலோசனை செய்யவுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரும் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்க தலைமையிலான ஆணைக்குழுவின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று வருகை தந்துள்ளனர். ஆணையாளர், செயலர், விசாரணைப் பணிப்பாளர், சட்ட அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இதன்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜும் பங்கேற்றிருந்தார்.
சமயத் தலைவர்களுடனும் இந்தக் குழுவினர் நேற்று கலந்தாலோசனை செய்திருந்தனர்.
யாழ். மாவட்டத்தில் பெரிதாகப் பேசப்படுகின்ற உயிர்கொல்லி போதைப் பாவனை தொடர்பாக ஆராயப்பட்டது. உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு தன்னார்வ ரீதியில் சமய நிறுவனங்கள் புனர்வாழ்வு அளித்தல் , அதற்கான பொறிமுறைகளை உருவாக்கல் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது. அதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு எவ்வாறான உதவிகளைச் செய்ய முடியும்? என்றும் கலந்தாலோசனை செய்திருந்தனர்.
அதன்பின்னர் வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சகல பொலிஸ் மா அதிபர்களுடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாகவும், பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கின்ற முறைப்பாடுகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
TL