உமாஓய திட்டத்தின் மூலம் விவசாயத்துறைக்கு பாரிய நன்மைகள்

நீர்ப்பாசனம், விவசாயம், கடற்றொழில் ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு பற்றி இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. உமாஓய நீர்ப்பாசனத் திட்டத்தின் மூலம் மொனராகலை மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 500 ஆயிரம் ஹெக்டயர் வயல்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ தெரிவித்தார்.
மாகம்புர கைத்தொழில் பேட்டைக்கும் இதன் மூலம் நீர் வழங்கப்படுகிறது. 998 குளங்களின் அபிவிருத்திப் பணிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஏனைய குளங்களில் மறுசீரமைப்புப் பணிகள் இந்த ஆண்டில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
பெரும்போகத்திற்குத் தேவையான உரம் உட்பட ஏனைய விவசாய உபகரணங்கள் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். உணவு தொழில்நுட்பம், பாதுகாப்பு என்பனவற்றிற்காக புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உயிரினங்களிடமிருந்து அறுவடையை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலக பொருளாதார நெருக்கடியினால், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் கடற்றொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கிருமிநாசினிகள், உரம் என்பன இல்லாமையினால், அலங்கார மலர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வி.இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.
