Home » உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும்!

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும்!

Source
உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான பணிகளை செய்ய இலங்கை தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். காலநிலை மாற்றத்தை தடுத்து நிறுத்துவதற்கு ப் பதிலாக அதனை தாமதப்படுத்துவதே இதுவரை நடந்துள்ளது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) பிற்பகல் நடைபெற்ற 10ஆவது சுற்றாடல் ஜனாதிபதி பதக்க விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த சேவையாற்றிய ஆசிரியர் விருது மற்றும் சிறந்த சேவையை ஆற்றிய சிறந்த பாடசாலை, பிராந்திய சுற்றாடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகங்களும் இந்த நிகழ்வின் போது பாராட்டப்பட்டதுடன், 129 சுற்றுச்சூழல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி பதக்கங்களும் வழங்கப்பட்டன. 14 ஜனாதிபதி சுற்றாடல் முன்னோடிப் பதக்கம் வென்ற அரலகங்வில விலயாய தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக விருது பெற்றதுடன், அதிகூடிய ஜனாதிபதி பதக்க வெற்றியாளர்களை (25) உருவாக்குவதற்கு வழிகாட்டிய மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மத்திய மாகாண அலுவலகம் சிறந்த அலுவலகத்திற்கான விருதை வென்றது. வைபவத்தின் இறுதியில் ஜனாதிபதி பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்றவர்களிடம் சுற்றாடலை பாதுகாப்பது தொடர்பான செய்தியை பாடசாலைகளுக்கு கொண்டு செல்லுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். சுற்றாடல் முன்னோடியின் கடமை பெரும் தியாகம் எனவும், எதிர்கால சந்ததியினருக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இன்று இந்தப் பதக்கங்களைப் பெற்ற அனைத்து சுற்றுச்சூழல் முன்னோடிகளையும் முதலில் வாழ்த்துகிறேன். இது ஒரு அர்ப்பணிப்பு. இந்த முன்னெடுப்பில் இணைய யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. மத்திய சுற்றாடல் அதிகார சபை 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதால், அனைவரும் தாமாக முன்வந்து இதில் பங்குகொண்டனர். வருங்கால சந்ததியினருக்காக நாம் அனைவரும் இந்த தியாகத்தை செய்கிறோம். இன்று உலகில் நிலவும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நான் குறிப்பிட வேண்டியதில்லை. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் எங்களுக்கு சிக்கல்கள் இருந்தன. ஆனால் இன்றைய பிரச்சினை காலநிலை மாற்றத்தை எப்படி தடுப்பது என்பதல்ல, அதை எப்படி மட்டுப்படுத்துவது என்பதுதான். மேலும் இந்த பணியை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டும். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், உலகில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. 1815 ஆம் ஆண்டு பிரித்தானியர்கள் இலங்கைக்கு வந்து மலைநாட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் போது இந்நாட்டின் சனத்தொகை 02 மில்லியனாக இருந்ததாக பலர் கூறுகின்றனர். ஒன்றரை லட்சம் கூட இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். 1931 இல் சர்வஜன வாக்குரிமையைப் பெற்றபோது, அந்த எண்ணிக்கை 05 மில்லியனாக இருந்தது. நாம் சுதந்திரம் அடையும் போது அது 07 மில்லியனாக இருந்தது. இன்று அதனை விட மூன்று மடங்காக உயர்ந்திருக்கும். ஆனால் எங்கள் காணிகள் அதிகரிக்கவில்லை. ஆனால் காடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 1970ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது, மகாவலி திட்டத்தை ஆரம்பிக்க பொலன்னறுவை பகுதியில் ஒன்றரை முதல் இரண்டு இலட்சம் ஏக்கர் காணியை ஒதுக்கினோம். இன்று அந்த பகுதிகளில் மக்கள் வாழ்கின்றனர். அதனால் தான் இன்று அரிசியில் தன்னிறைவு அடைந்துள்ளோம். அன்று அந்த ஒன்றரை இலட்சம் ஏக்கர் ஒதுக்கப்படாமல் இருந்திருந்தால், இன்று நாம் அரிசியில் தன்னிறைவு பெற்றிருக்க முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவின் மக்கள் தொகை 400 மில்லியனாக இருந்தது. இப்போது உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது. மக்கள் தொகை மூன்று மடங்கு, நான்கு மடங்கு அதிகரித்து வருகிறது. அதுதான் வித்தியாசம். உலகம் முழுவதும் இந்தப் பிரச்சினைகள் உள்ளன. நம் முன்னோர்களின் காலத்தில் மின்சாரம் இருக்கவில்லை. மேலும் நமக்குத் தேவையான பொருட்கள் குறைவாகவே உள்ளன. வீடுகளில் குளிரூட்டிகள் இல்லை. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் நுகர்பொருட்கள் அதிகரித்துள்ளன. மற்றும் பல்வேறு வகையான உணவுகளை வாங்குகிறோம்.அன்று கைத்தொழிற்சாலைகள் இருக்கவில்லை. இன்று உலகம் முழுவதுமே தொழில்மயமாகிவிட்டது. எங்களுக்கு விமானப் பயணங்கள் தேவை. எனவே, தொழில் புரட்சிக்குப் பிறகு, உலகில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில், இரண்டு பெரிய போர்கள் வெடித்தன. அணுகுண்டு வீசப்பட்டது. சுற்றுச்சூழல் அழிவு அதிகரித்து வருகிறது. இதனால் இன்றைய காலநிலை முற்றிலும் மாறிவிட்டது. 2050இல் உலக மக்கள் தொகை இன்னும் அதிகரிக்கும். அப்போது நாம் எப்படி இந்த காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வது? எனவே, ஒரு நாடென்ற ரீதியில் நாம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான புதிய சட்டங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த சுற்றுச்சூழல் சட்டங்கள் கொண்டு வரப்பட்ட காலத்தில், அவை நவீன சட்டங்களாக இருந்தன, ஆனால் இன்று அவை நவீன சட்டங்கள் அல்ல. எனவே, புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள் அவசியம்.மேலும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் புதிய சட்டங்கள் அவசியமாகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான கேந்திர நிலையமொன்றை உருவாக்குவதில் கவனம் செலுத்தியுள்ளோம். அதன்படி, சிங்கராஜ வனம், ஹோர்டன் சமவெளி, சிவனொலிபாதமலை மற்றும் நக்கிள்ஸ் ஆகிய இடங்களை பாதுகாக்க புதிய விதிகள் கொண்டு வரப்படும். முத்துராஜவெல போன்ற இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய சட்டங்களை கொண்டு வர இருக்கிறோம். மேலும், புதிதாக காடுகளை உருவாக்க வேண்டும். இதற்குத் தேவையான சட்டங்களை உருவாக்க இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் அதனோடு நின்றுவிடாது காலநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்த வேண்டும். அதனை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக பாடவிதானத்தில் சேர்க்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, உலகின் முதல் சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். முதுகலைப் பட்டப்படிப்பைப் பெறுவதற்கான வாய்ப்பையும், ஆராய்ச்சிப் பணிக்கான வாய்ப்பையும் வழங்க எதிர்பார்க்கிறோம். இன்று உலகில் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நிலையமொன்று கிடையாது. அந்த நிலையத்தை இலங்கையில் நிறுவுவதன் மூலம் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல நாடுகளின் பங்களிப்புடன் அந்தப் பணி மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2,000 – 3,000 பேர் இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தேவையான பயிற்சிகளைப் பெற்று, உலகத்துடன் சிறந்த உறவை உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இலங்கை என்ற வகையில் நாம் என்ன உதவிகளை செய்ய முடியும் என்பதை நாம் கண்டறிய வேண்டும். அதற்கு எம்மால் வழங்கக்கூடிய உறுதுணையாக இந்தப் பல்கலைக்கழகம் இருப்பதாக நான் நம்புகிறேன். எனவே, தற்போது பல நாடுகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு டுபாயில் நடைபெறும் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் இது குறித்த விடயங்களை முன்வைப்போம். எனவே, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இந்த தகவலை அனைத்து சுற்றுச்சூழல் முன்னோடிகள் தங்கள் பாடசாலைகளுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்குவது உங்கள் பொறுப்பாகும். சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எம். ரணசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே, பதில் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர். எம். எஸ். கே.ரத்னாயக்க, ஜனாதிபதி சுற்றுச்சூழல்பதக்கம் வென்றவர்கள், அவர்களின் பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். N.S
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image