நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இடம்பெற உள்ள உள்ளூராட்சி தேர்தற்காக செலவிடப்பட இருக்கும் பெரும் தொகையை கணக்கில் எடுத்து இதனை வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவது தான் சிறந்தது என்று இலங்கை மக்கள் தேசிய கட்சி செயலாளர் நாகராசா விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
இடம்பெற உள்ள உள்ளூராட்சி தேர்தல் ஆனது இது ஒரு தேவையற்ற தேர்தல் ஆகும். இலங்கையிலுள்ள மாநகர சபை, பிரதேச சபை, நகர சபைகளின் உறுப்பினர்களது சம்பளம் மற்றும் எரிபொருள் செலவு என்பது தற்போது தேவையற்ற ஒன்றாகும். ஏனைய தேர்தல்கள் மக்களுக்கு பிரயோசனமானதாகும் ஆனால் இந்தத் தேர்தலை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்.
நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பும் வரையில் இந்த சபைகளை முன்னெடுப்பதற்கு அங்குள்ள அரச அதிகாரிகளே போதுமானதாகும். தெரிவு செய்யப்படுபவர்கள் அங்கு சென்று சண்டை பிடிப்பது மட்டுமே மிச்சம். அங்கு அரசியல் ரீதியான தீர்வுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. ஏற்கனவே அவை அரசாங்கத்தினால் முறையாக நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோது இத்தேர்தல் தேவையற்றது. இதனை தற்காலிகமாக நிறுத்துவது தான் சிறந்தது.
நாட்டில் சகல தரப்பினரும் தற்போது பாதிக்கப்பட்டுள்ள போது நாட்டில் சுகாதாரத்துறை, விவசாயத்துறை. கல்வி என்பன மிகவும் பாதிக்கப்பட்டுள்ள போது இந்த பணத்தை அதற்கு பாவிப்பதுதான் சிறந்தது என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாகராசா விஷ்ணுகாந்தன் தெரிவித்தார்.
AR