உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க எல்லை நிர்ணய தேசிய குழு யோசனை முன்வைத்துள்ளது. இதன்படி, எட்டாயிரத்து 400 ஆக காணப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரத்து 714 ஆகக் குறைக்க முடியும் என அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தமது அறிக்கையின் ஆரம்ப வரைபை பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் நேற்று கையளித்தார். உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பில் வர்த்தமானி மூலம் அறிவிக்கலாம் என மஹிந்த தேஷப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார். வட்டார எல்லை மற்றும் குடித்தொகை பரம்பல் தொடர்பில் இந்த வரைபில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்காலத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அறிக்கையில் சேர்த்துக் கொள்வதற்கான யோசனைகளை சமயத் தலைவர்களும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் முன்வைத்துள்ளனர். அறிக்கையைத் தயாரிப்பதற்கு எதிர்வரும் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் கிடைக்கப்பெறும் யோசனைகள் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாக மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.