ஊழியர் சேமலாப நிதியம் பாதுகாப்பாக உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் உறுதி

ஊழியர் சேமலாப நிதி, பாதுகாப்பாக உள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். ஊழியர் சேமலாப நிதியை அரசாங்கம் சூறையாட முயற்சிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துவரும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்தார். தேசிய வானொலியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் எடுக்கவில்லை. ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்கள் அதன் பலன்களை விரைவில் பெற்றுக் கொள்வதற்கு தேவையான முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்லைன் முறையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தேவையான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சந்திரகீர்த்தி தெரிவித்தார். தொழிலாளர் திணைக்களத்தில் இடம்பெறும் அனைத்து பணிகளுக்கும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
