ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. இலங்கை மீதான வெளித்தலையீடுகளை எதிர்ப்பதாக சீனா அறிவித்துள்ளது. நாடொன்றின் உள்ளக விவகாரங்களில் தலையீடுகளை மேற்கொள்ள மனித உரிமைகளை பயன்படுத்த வேண்டாம் என்று ஜெனீவாவிற்காக சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி கோரிக்கை விடுத்துள்ளார். சீனா கடந்த காலத்தில் இலங்கைக்கு தேசிய மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. இம்முறையும் இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கத் தயார் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின்போது சீனப் பிரதிநிதி அறிவித்திருந்தார். பயங்கரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நல்லிணக்கம், மறுசீரமைப்பு என்பனவற்றை மேம்படுத்தி மனித உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை சீனா பாராட்டியுள்ளது. அயல் நாடு என்ற ரீதியிலும் பாரம்பரிய நட்பு நாடு என்ற வகையிலும் சமூக பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துகொள்ள இலங்கைக்கு உதவுவதாகவும் ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி உறுதியளித்துள்ளார்.
