ஐந்து எரிபொருள் கப்பல்கள்; எதிர்வரும் 12 தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளன

.
எரிபொருள் கொண்டு வரும் ஐந்து கப்பல் இன்றிலிருந்து எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். டீசல் கொண்டு வரும் இரண்டு கப்பல்கள் இன்றும் நாளையும் நாட்டை வந்தடையவுள்ளன. இந்திய கடன் உதவித்திட்டத்தின் கீழான இறுதியாக டீசலை கொண்டு வரும் கப்பல் எதிர்வரும் 16ஆம் திகதி நாட்டை வந்தடையும். இதேவேளை பெற்றோலை கொண்டு வரும் மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 22ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன் மசகு எண்ணெய் கொண்டு வரும் மற்றுமொரு கப்பலும் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும்.
மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் கஞ்சன விஜயசேரக குறிப்பிட்டார். இதற்காக மீள் புதுப்பிக்கதக்க சக்திவள வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இது பற்றிய சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.; சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை வீடுகளின் கூரைகளில் பொருத்தி மின்சாரம் பெறும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை, மின்சார சபை ஊழியர்கள் தனியார் நிறுவனங்களில் சேவையாற்றுவதற்கு விடுமுறை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக இந்தப் பணியில் இணையும் ஊழியர்களின் பதவி உயர்வு விடயத்தில் பிரச்சனை ஏற்படாது. பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதி வழங்கும் வாகனங்களுக்கும் சுற்றுலாத்துறையில் சேவை வழங்கும் வாகனங்களுக்கும் எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டார்.
பொது போக்குவரத்திற்கும் முன்னுரிமை வழங்கி எரிபொருள் விநியோகிப்பதாக பெற்றோல் பகிர்ந்தளிக்கும் சங்கத்தின் உபதலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நிலையங்களுக்கு வழங்கும் எரிபொருள் தற்போது விரைவில் விற்பனையாவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
