Home » ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி தீர்வு – மக்கள் பிரகடனம் வெளியீடு

ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்குக்கு சமஷ்டி தீர்வு – மக்கள் பிரகடனம் வெளியீடு

Source

நூறு நாட்கள் செயல்முனைவின் இறுதி நாள் நிகழ்வு தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் இன்று நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு மக்கள் கெளரவமான உரிமைகளுடன் வாழும் வாழ்வைப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரி 100 நாள் செயல்முனைவு வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அதன் இறுதி நாள் நிகழ்வு வடக்கு, கிழக்கு தழுவி இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு 100 நாள் செயல்முனைவின் மக்கள் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்களான நாம், அதிகாரப் பகிர்வு கோரிய எமது தொடர் நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாளான, 8 கார்த்திகை 2022 ஆகிய இன்றைய தினம், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கான நிலைபேறான அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை முன்வைக்கின்றோம்.

கடந்த காலங்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டங்களைக் கருத்திற்கொண்டும், 13ஆவது திருத்தத்தின் சாராம்சத்தைப் பரிசீலித்தும், குறிப்பாக 2002ம் ஆண்டு நோர்வே நாட்டின் மத்தியத்துவத்துடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிநடாத்தலில் ஜி. எல். பீரிஸ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினால் ஒஸ்லோ உடன்படிக்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட “ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையிலான தீர்வு” என்பதனை சீர்தூக்கிப் பார்த்தும் இந்தப் பிரகடனம் மக்களின் குரலாக வெளிப்படுகின்றது.

தமிழ் பேசும் மக்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டு பாரம்பரியமாக தமக்கேயான தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.  இப்பிராந்தியத்தில் எண்ணிக்கைப் பெரும்பான்மையினரான தமிழ் மக்களுடன் எண்ணிக்கைச் சிறுபான்மையினரான தமிழ்பேசும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்த சிங்கள பெரும்பான்மை அரசுகள் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவந்த இனவாத அடிப்படையிலான அரசியல், மொழி, பொருளாதார, சமூக ரீதியான அடக்குமுறைகள் மற்றும் வன்முறைகளின் காரணமாகவே வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துள் மாகாண முறைமையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும், தமிழ் மொழியும் அரச கரும மொழியாக அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என 13ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், 2006இல் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு பிரிக்கப்பட்டு வடக்கும் கிழக்கும் தனித்தனி மாகாணங்களாக்கப்பட்டன.

1987இல் மேற்கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கை மூலமான 13ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்பட்டு இற்றுடன் 35 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்தக் கால இடைவெளியில் இலங்கை அரசினால் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதுடன் தமிழர்கள் மீது போர்க்குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

தொடர் இடப்பெயர்வு மற்றும் பலவருடகால அகதிமுகாம் வாழ்வை அனுபவித்தனர். போரினால்  இருப்பிடங்களும், சொத்துக்களும், வாழ்வாதாரங்களும் மரங்கள் உட்பட முற்றாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதத் தடைச் சட்டதின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.  இராணுவமயமாக்கம், திட்டமிட்ட முறையிலான நில அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள் காரணமாக பாரிய அச்சுறுத்தலை இன்றுவரையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எதிர்கொண்டுவரும் அரசியல் அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, கௌரவமான உரிமைகளுடன் கூடிய வாழ்வை வாழ்வதற்கு அடிப்படையான நிலைபேறான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை வலியுறுத்துகின்றோம்:-

1. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு – கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.

2. ஒருங்கிணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.

3. ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

4. முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் சபையின் தலைமை உறுப்பினராகத் திகழ்வார்.

5. ஆளுநர் என்பவர் மாகாணத்தின் மக்கள் பிரதிநிகள் சபையைக் கட்டுப்படுத்தாதவராகவும் மத்திய அரசின் கௌரவ பிரதிநிதியாகவும் இருக்க வேண்டும்.

6. வடக்கு, கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

7. மாகாண மக்களின் முன்னேற்றத்தை அடிப்படையாகக்கொண்ட அபிவிருத்திசார் சர்வதேச ஒப்பந்தங்களை மாகாண ஆட்சி மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதில் சர்வதேச வணிகம், தொழிற்றுறை அபிவிருத்தி, நகரமயமாக்கல் அடங்கலான கட்டுமான அபிவிருத்தி ஆகியன அடங்கல் வேண்டும்.

8. காணி மற்றும் மாகாண ஆட்சியின் அதிகாரத்துக்கு உட்பட்ட ஏனைய அனைத்து விவகாரங்கள் சார்ந்தும் சட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தும் அதிகாரம் மாகாண ஆட்சிக்கு வழங்கப்பட வேண்டும்.

9. மாகாண அலகுக்கான பொலிஸ், உளவுத்துறை சேவைகள் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

10. நீதித்துறை, அரச நிர்வாகம், கல்வி, பொதுச்சுகாதாரம், பொதுப்போக்குவரத்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், எரிபொருள் அடங்கலான ஏனைய அனைத்து துறைகளும் கவனத்திற்கொள்ளப்பட்டு மாகாண ஆட்சிக்குள்ள அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்

11. தற்போது வடக்கு, கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

12. தற்போதைய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் கரையோரப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மிதக்கும் கடற்படைத்தளங்களை தேவையான கடற்பிரதேசங்களில் மத்திய அரசு அமைக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் காணிகள் இராணுவத்தின் வசமிருந்து விடுவிக்கப்படுவதுடன் இயல்புவாழ்வை மீளப்பெற முடியும்.

13. இலங்கையின் மத்திய அரசானது, வடக்கு – கிழக்கு மாகாண அலகு பொருளாதாரப் பலம் அடைவதற்காக குறிப்பிட்ட காலம்வரையில் தேவையான நிதிசார் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்.

14. தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, பல்வேறுபட்ட மனித உரிமை மீறல்கள் சார்ந்து பொறுப்புக் கூறும் கடப்பாட்டை இலங்கை அரசு கொண்டுள்ளது. எனவே சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஐ.நா.வின் வழிகாட்டலில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து நீதிப்பொறிமுறைகளை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

15. வடக்கு – கிழக்கு மாகாண அலகானது மாகாணத்துக்குள் வாழும் அனைத்து இன, மத மக்கள் மத்தியிலும் சகவாழ்வு, இன – மத நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகிய நிலைபேறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

16. மத்திய அரசானது, இலங்கை நாட்டின் மக்கள் அனைவரினதும் ஜனநாயக வாழ்வு, இன நல்லிணக்கம், சகவாழ்வு, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் ஆகிய மனிதப் பண்புகளை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு ஐக்கிய இலங்கைக்குள் மீளப்பெறமுடியாத சமஷ்டி  முறையிலான அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க நாம் அயலிலுள்ள நட்புநாடான இந்தியாவையும், அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அடங்கலான மையக்குழு நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும், ஐ.நா. சபையையும் கோருகின்றோம்” – என்றுள்ளது.

N.S

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image