ஒரு ஹெக்டெயர் மூலம் கிடைக்கும் நெல் அறுவடையை எதிர்வரும் பத்து ஆண்டுகளில் 5.5 மெற்றிக் தொன்களினால் அதிகரிக்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதன் கீழ், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 4.7 மெற்றிக் தொன் நெல்லை அறுவடையாக பெறுவது இலக்காகும். எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் 5.5 மெற்றிக் தொன் நெல்லை அறுவடையாக பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கென விவசாய அமைச்சின் சகல பிரிவுகளுடனும் இணைந்து புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலதி பரசுராமன் தெரிவித்துள்ளார். இலங்கையின் நெற் செய்கையை அதிகரிப்பதற்கான பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெற் செய்கைக்கான புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது உட்பட பல்வேறு வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றன. மேல் மாகாணத்தில் மிகவும் குறைவான அறுவடையே பெற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால், இந்தப் பிரதேசத்திற்கும், ஈரவலயங்களுக்கும் கூடுதல் விளைச்சலை தரக்கூடிய விதை இனங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மாலதி பரசுராமன் மேலும் தெரிவித்தார்.