தமிழக அரசும் இந்திய அரசும் இணைந்து இலங்கை அரசிடம் பேசி உடனடியாக கச்சதீவு புத்தர் சிலையை அகற்றவேண்டும் என்று தமிழகம் இராமேஸ்வரம் மாவட்டம் வேர்க்கோடு பங்குத் தந்தை தேவசகாயம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ‘உதயனுக்கு’ தெரிவித்ததாவது,
இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து பக்தர்கள் மொழி, இனம் கடந்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை அந்தோனியார் ஆலயத்தில் நிறைவேற்றுகிறார்கள். 1913ஆம் ஆண்டு இந்தியப் பக்தர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இன்று பெரிய ஆலயமாக அமைக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலை அங்கு நிறுவியிருப்பது எமது மக்களுக்கு மிகப்பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளது. கச்சதீவுப் பெருநாளை இருநாட்டு தமிழர்களும் சேர்ந்து விமரிசையாக கொண்டாடுகிறார்கள். கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கின்றார்கள்.
‘அதற்குப் போட்டியாக புத்தர் சிலையை வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தை எதிர்காலத்தில் ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டும். புத்தருடைய சிலையை நிறுவுவதன் ஊடாக கச்சதீவு அந்தோனியாருக்கு சமமாக கச்சதீவில் திருவிழாவை புத்தருக்கு எடுக்க வேண்டும்’ என்பது அவர்களின் நோக்கம்.
சர்வதேச புனித பூமியாக காணப்படுகின்ற கச்சதீவில் புத்தர் சிலையை நிறுவுவதன் ஊடாக தங்களுடைய சிங்கள ஆதிக்கத்தை வெளிப்படுத்துவது அவர்களுடைய நோக்கமாக காணப்படுகிறது. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் சிலையை நிறுவுவோம் என்பதற்கு உதாரணமாகவே இது காணப்படுகிறது. வடக்கில் பல பகுதிகளிலும் இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள பௌத்தமயமாக்கல் இடம்பெற்று வருகின்ற நிலையில் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் மகிமையை குறைக்கின்ற ஒரு செயற்பாடாகவே இதனை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து கச்சதீவு நோக்கி வருகின்ற பக்தர்களை தடுக்கும் வகையிலேயே இம்முறை, உணவு ,தண்ணீர் என்பனவற்றை ஒழுங்கான முறையில் கச்சதீவு பக்தர்களுக்கு வழங்கவில்லை. இவ்வாறு செய்வதன் ஊடாக அடுத்த ஆண்டு பக்தர்கள் வருவதற்கு விரும்பமாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கின்றனர். இது இலங்கை அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலா என்று சந்தேகமாக இருக்கின்றது, என்றார்.
இதேவேளை, கச்சத்தீவு வருடாந்தத் திருவிழா குழு பொறுப்பாளர் ஜேசுராஜா தெரிவிக்கையில், கச்சத்தீவில் புத்தர் சிலை வைப்பதற்கு தமிழக பாரம்பரிய மீனவர்கள் சார்பில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம். உடனடியாக புத்தர் சிலையை அகற்ற இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. இல்லையெனில் இதனால் மிகப்பெரிய பிரச்சினை உருவாகக்கூடும். எனவே இந்திய மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து இலங்கை அரசுடன் பேசி புத்தர் சிலையை அகற்றவேண்டும் என்றார்.
TL