கடந்த பத்து மாதங்களில் நாட்டில் 65 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்

இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் நாட்டில் சுமார் 65 ஆயிரம் டெங்கு நோயாளர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, கேகாலை, குருநாகல், யாழ்ப்பாணம், வவனியா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன. மழையுடன் கூடிய காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்தும் வகையில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
