கடன் மீள் கட்டமைப்பு குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் கடன் மீள் கட்டமைப்பு குறித்து சீனாவின் எக்ஸின் வங்கியுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க சீன அரசாங்கம் எதிர்பார்ப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை வர்த்தக சபையின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற 2022 பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டார்.
சீன கொமினிஸ்ஸ கட்சியின் மாநாடு காரணமாக சீனாவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தாமதமானது. இந்த மாநாடு நிறைவு பெற்றிருப்பதால் கலந்துரையாடல்களை துரிதப்படுத்தலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கையின் கடன் மீள்கட்டமைப்பிற்கு சீனா ஒருபோதும் எதிர்ப்பில்லை. எதிர்காலத்திற்காக பசுமை ஹைட்ரஜன் துறை மீது இலங்கை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சூரிய எரிசக்தியை துறையைவிட கூடுதலான உற்பத்தித் திறன் கொண்ட இந்த துறைமீது தனியார் துறை கவனம் செலுத்த வேண்டும். காணி சட்டத்தை மீண்டும் கவனத்தில் கொண்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இலங்கைக்கு விரைவில் தேவைப்படுவது புதிய பொருளாதாரமே ஒழிய ஒருபோதும் மறுசீரமைப்பு அல்ல என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இலங்கையை பிரதான விநியோக மத்திய நிலையமாக மாற்ற முடியும். இதற்காக தற்போது தொலைநோக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் கொழும்பு துறைமுகத்தை ஜாஎல வரை நீடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இரண்டாவதாக கொழும்பு துறைமுக நகரில் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியை துறைமுக அபிவிருத்திக்காக ஒதுக்கியிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதற்காக ஜப்பான் முதலில் முன்வந்ததது. தற்போது முன்னெடுக்கப்படும் முறைக்கு அமைய சிறிய துறைமுகத்தை வழிநடத்துவதால் பொருளாதாரத்திற்கு கூடுதலான பலன் கிட்டாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை துறைமுகமும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் உள்நாட்டு கடல் துறைக்கு கூடுதலான நேர்கனிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிதொழில்நுட்ப கட்டமைப்புடன் விவசாயத்துறை முன்னேற்றப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இது தவிர கல்வியின் ஊடாகவும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
எரிசக்தி துறை, தொலைத்தொடர்பு, சூரிய எரிசக்தி, காற்று வலு, துறைமுகம் ஆகிய துறைகளில் முதலீடு செய்து இந்தியா இலங்கைக்கு ஆதரவு வழங்கும் என இந்தப் பொருளாதார மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்திய இந்திய மாற்றத்திற்கான தேசிய நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் பரமேஸ்வரன் ஜயன் தெரிவித்தார். இந்தியாவின் அதானி நிறுவனம் 65 கோடி டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டை துறைமுகத் துறையில் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
