Home » கந்தகக் காற்றிடையே …….

கந்தகக் காற்றிடையே …….

Source

-------------------------------------------------------------------------------------------------------------------------------- முகுந்தமுரளி

“2009” திட்டமிட்ட இன அழிப்பின் உச்சக்கட்ட
அகோர ஆட்டத்தில், முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக சிங்கள இனவெறி இராணுவத்தினால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவ்வேளையில் உயிரோடு இருந்த மக்களுக்கு பசிபோக்கி உயிர்காத்திட, அங்கு பச்சையரிசி கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் உப்பிட்டுக் காய்ச்சினார்கள், இறுதிநேரத்தில் உப்புத் தட்டுப்பட்டு போன பின்னரும் உப்பில்லா முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தியே மக்கள் உயிர்பிழைத்தார்கள். இது வரலாற்றில் மறக்கவோ, மறைக்கவோபட முடியாத ஒரு பகுதியாகும். 

சிங்கள அரசின் திட்டமிட்டப்பட்ட இனவழிப்பில் பொருளாதாரத்தடை, உயிர்காக்கும் மருந்துத்தடை மற்றும் உணவுத்தடையும் ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது. சிங்கள அரசு திட்டமிட்ட வகையில்  உணவுத் தடையுடன் பல மாதமாக நடத்திய  யுத்தத்தில்  கொத்தணிக்குண்டு வீச்சு, நச்சுக்குண்டுத் தாக்குதல், எறிகணை வீச்சுக்களில் இருந்து உயிரைக்காக்க ஓடி ஒளிந்த மக்கள் உணவின்றியும் தவித்தனர், பலருக்கு ஒரு நேர உணவுகூட கிடைக்காமல் பட்டினி கிடந்தார்கள்,  குழந்தைகளுக்கான உலர் உணவிற்கு கூட வழியில்லாத கையறுநிலையில் கண்கலங்கித் தவித்தனர் அப்பாவித்தமிழ் மக்கள். அக்காலகட்டத்தில் போராளிகளிற்காக   ஒதுக்கப்பட்ட உணவுப்பொருட்களை தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மக்களுக்கு வழங்கிய நேரத்திலேயே  கஞ்சி வழங்கும் பணியும் தொடங்கப்பட்டது. இறுதிக் காலகட்டத்தில் சிறிய தொகை அரசியே இருந்தபடியால் அரிசியும் தவிடும் கலந்து உப்புமிட்டு முள்ளிவாய்க்காலில் கஞ்சியாகக் கொடுக்கப்பட்டது. அக்கஞ்சியைத் தமிழர் புனர்வாழ்வுக்கழகம்  பல இடங்களில் தயாரித்து மக்களின் பசியை போக்கினார்கள்.

யுத்தம் முடிவுற்று ஆண்டுகள் பல உருண்டோடிப் போனாலும் யுத்தம் தந்த வடுக்களை யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. இந்த யுத்தகால நினைவுகளில் மறக்கமுடியாதவற்றுள் ஒன்றாக விளங்குவது தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி…!! பல இலட்சம் மக்கள் கஞ்சிக்காகக் காத்திருந்து தமது பசிப்பிணி போக்கிய வரலாறு இது. இந்தக் கஞ்சி உணவு அன்றைய நாட்களில் எமது மக்களின் வாழ்வோடு ஒன்றாகப் பின்னிப் பிணைந்ததாகவே காணப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உணவுக்காகப்  பட்ட அவலத்தையும், கஞ்சி உணவே  எமது உறவுகளின் உயிரை தக்க வைத்தது என்பதையும் வெளிப்படுத்தும் முகமாகவும் அவற்றை எதிர்கால சந்ததியினருக்கும், இளைய தலைமுறையினருக்கும் தெரியப்படுத்தும் முகமாகவும் நினைவேந்தல் நாட்களில் கஞ்சி உணவை வழங்குவது வழமையாகும். இக்கஞ்சி உணவானது முள்ளிவாய்க்கால் யுத்தத்தின போது  எமது உறவுகள் உணவிற்காக பட்ட துன்பத்தை  நாம் மட்டுமல்லாது கஞ்சியை உண்ணும்போது எமது தேசத்தின் வரலாற்றை எம் அடுத்த சந்ததிக்கும் விளக்கி, நினைவுகளை எடுத்துச் செல்வதற்கு இது சரியான ஒரு வழிமுறையாக அமையும். 

எடுத்துக்காட்டாக 400 ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தியர்களுக்கு அடிமையாக இருந்த யூதர்கள் விடுதலை அடையப் புறப்பட்ட பொழுது பயணத்தில் எவ்வகையான உணவுகளை சாப்பிட்டு சியோலுக்கு (இஸ்ரேல்) திரும்பினார்களோ அவ்வகையான உணவுவகைள சாப்பிட வருடந்தோறும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 7 வரை ஒன்று கூடி முன்னோர் பட்ட துயரங்களையும், விடுதலைப் பயணத்தையும் இவ்வாறாக வரலாற்றையும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

யூத மக்களைப் போகவிட எகிப்திய மன்னன் பார்வோன் மறுத்ததற்காக எகிப்தியர்களைத் தண்டிக்கும் நேரத்தில் கடவுள் யூதர்களின் வீடுகளைக் கடந்து “கடந்து" (ஹீப்ருவில் - “பாசா") "பெசாக்" என்ற பெயரை பாரம்பரியம் தொடர்புபடுத்துகிறது. யூத பிரார்த்தனை புத்தகத்தில் (சித்தூர்) பெசாக் "எங்கள் சுதந்திரத்தின் நேரம்" என்று அழைக்கப்படுகிறது. தோரா இதை “புளிப்பில்லாத ரொட்டி விருந்து" என்று அழைக்கிறது, ஏனெனில் பெசாக்கின் முக்கிய அம்சம் புளிப்பில்லாத ரொட்டியை (மாட்ஸோ) சாப்பிடுவதற்கான கட்டளை மற்றும்  வீடுகளில் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, புளிப்பு (சாமெட்ஸ்) சாப்பிடுவதற்கும் கடுமையான தடையை விதித்துள்ளது. 

2013இல் பஸ்கா. மார்ச் 25 அன்று நான்காவது சூரிய நேரத்திலிருந்து முஎயளள சாப்பிடுவது தடைசெய்யப் பட்டுள்ளது. பரிசுத்த வேதாகமத்தில் மேலும் பெசாக் கொண்டாடுவதற்கான செயல்முறை விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பெசாக் நாட்கள் முழுவதும், தோரா எந்த வடிவத்திலும் புளித்த உணவை உட்கொள்வதை தடை செய்கிறது. எகிப்தை விட்டு வெளியேறும் போது யூதர்களுக்கு சேமித்து வைக்க நேரமில்லாமல் போன அதே உணவு இதுதான். புளிக்கக்கூடிய உணவுகளையும் தவிர்க்கவும். மால்ட் மதுபானங்கள், பியர் மற்றும் பிற ஈஸ்ட் அடிப்படையிலான மதுபானங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. பெசாக்கில் அனுமதிக்கப்பட்ட ஒரே ரொட்டி மாட்சா ஆகும், இது கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட புளிப்பில்லாத ரொட்டியாகும், இது எகிப்திலும் வெளியேறும் காலத்திலும் யூதர்களை அடிமைப்படுத்தியது. மாட்சா என்பது யூதர்கள், இறுதியாக நாட்டை விட்டு வெளியேற பார்வோனின் அனுமதியைப் பெற்றதால், எகிப்தை விட்டு அவசரமாக வெளியேறினர், அவர்கள் இன்னும் எழாத மாவிலிருந்து ரொட்டி சுட வேண்டியிருந்தது. இது போல் வழிபாட்டு ரீதியாக கட்டாயமான தடைகளுடன் யூதர்கள் தம் முன்னோரின் அவலங்களை வரலாற்று சுவடுகளையும் நினைவு கூருகின்றார்கள். 

அதேபோன்று துருக்கியின் ஆர்மேனிய பகுதிகளில் வாழும் மக்கள் பல ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு முன்பு பேரிடரினை சந்தித்த போது தமக்கு உணவிற்கான பஞ்சத்திலிருந்து எப்படி அவர்கள் மீண்டார்கள் என்பதை நினைவு கூரும் முகமாக  ஒரு கஞ்சியினை ஒரு நினைவு கூரும் நிகழ்வாக பகிர்வதன் மூலம் பல்லாயிரக் கணக்கான வருடங்களுக்குப் பிற்பாடும் தங்கள் வரலாற்றைக் கடத்தி மற்றைய சமூகத்தின் மத்தியிலும் அதை கொண்டு சேர்க்கிறார்கள்.

ஆகவே இவற்றை ஒரு முன்னுதாரணமாக எடுத்து எமது கலாச்சாரத்தில் கூட ஆடிக்கூழ், தைப் பொங்கல் எல்லாம் ஓர் உணவு சார்ந்த அதேநேரம் ஏதோ ஒரு விடயத்தை பறைசாற்றுகிற பண்பாடுதான். அதேபோல் நாமும் அதே வழிமுறைகளை கையாண்டு, முள்ளிவாய்க்கால் கஞ்சியை, முள்ளிவாய்க்காலில் எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு வருங்காலத்திற்கு சொல்லுகின்ற ஒரு வழிமுறையாக கையாண்டு, அதில் வெற்றி காண முடியும் என்று பெரும்பாலான தமிழர்கள் நம்புகின்றார்கள். 

; நமது வரலாற்றிலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு திட்டமிட்டவகையில் தமிழின அழிப்பினை அரங்கேற்றிவருகின்ற வேளையில், வேலிபோல் தமிழ் மக்களைக் காத்த விடுதலைப் போராளிகளை அடியோடு அழிக்க முனைந்தவேளையினிலேயே, இந்நூற்றாண்டின் ஆரம்பதில் நடைபெற்ற மிகப்பெரிய பேரவலமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையையும் உலகமறிய நடத்தியது. அந்நேரத்தில் அந்த இன அழிப்பிற்கு ஆயுதமாக பயன்படுத்திய உணவுத்தடையும் மக்களை கொன்றழிக்கக் கூடிய சூழ்நிலையில் போராளிகளின் உணவுத் தேவைக்காக வைக்கப்பட்டிருந்த அரிiசியை கஞ்சியாகக் காய்ச்சி பட்டினிச்சாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற முற்பட்ட வரலாற்று நிகழ்வை நாமும் மே 12 முதல்  மே 18 வரையிலான ஒரு வாரகாலப்பகுதியில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி” ஐ அருந்துவதுடன், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் எமது பிள்ளைகளுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கஞ்சியுடன் எமது வரலாற்றையும் பகிர்வதன் மூலம் கடத்திச் செல்வோம். 

உடலின் இயக்கத்திற்கு நீரே மிக ஆதாரமானதாகும். தமிழர்கள் உயிர்வாழ  அறம் எனும் நீரில் அமிர்தமான தமிழ் உணர்வெனும்  அரிசியை இடுவதாகக்குறியீடாகக் கொண்டால், உப்பு என்பது இறுதி தாக்குதல்களின் பொழுது தமிழர்கள் சிந்திய கண்ணீரையும், குருதிiயும் கசப்பான அனுபவங்களையும் குறியீடாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறாக தமிழின உணர்வாளர்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுகூரலை தமிழீழத் தமிழினம் கடைப்பிடிக்க முற்படுகின்றது. 

இன அழிப்புப் போர் ஒன்றின் ஊடாக தமிழீழ நடைமுறை அரசை அழித்து, ஈழத் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய தன்னலமற்ற விடுதலைப் போராட்ட இயக்கத்தை முற்றுமுற்றாக அழித்து அடிபணிய வைக்க சிங்கள பௌத்த பேரினவாத அரசும், உலக ஏகாதிகத்திய அரசுகளும் கங்கணம் கட்டித் தொடுத்தபோரில், எதுவரினும் தமிழர் இறைமையை சரணாகதியாக்க மாட்டோம் எனும் மாண்பை நமது மக்களும், மாவீரர்களும், முழு உலகமும் அறிய முள்ளிவாய்க்காலில் நிறுவிய நாட்களாகும். 

இலங்கையில் தமிழர்கள் பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருப்பது ஓர் இனவிடுதலைப்போராட்டமே என்பதனை இந்த உலகம் நன்கு அறிந்திருந்தும் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதம் எனும் முத்திரையிட்டு தங்கள் எதேச்சாதிகாரத்தனத்தை மேற்கொண்டன. மனித உரிமைகளைக் காப்பதற்கான ஐக்கியநாடுகள் மனித உரிமைச்சபையே இந்த யுத்தத்தைக் கண்மூடிவாய்பொத்தி பார்த்துக் கொண்டிருக்க, தமிழீழ நிலப்பரப்பில் இருந்து அரசார்பற்ற தொண்டுநிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்கள், மனிதநேயச் செயற்பாட்டு அமைப்புக்கள் அனைத்தையும் வெளியேற்றப்பட்டது. இதன் பின்னர் உயிர்காக்கும் மருந்துப்பொருட்கள் முதற்கொண்டு, குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் வரை தடைசெய்யப்பட்டன. பின்னர் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தமிழீழமக்களின் தாய்நிலத்தைச் சுடுகாடாக்கி ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்த நாளே “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை” நடைபெற்ற நாட்கள். உலகம் வாழ்  தமிழர்கள் அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியநாள். 

இந்த நிகழ்வையே மே 12 முதல் மே 18 வரை ஆலயங்களிலும், பொதுஇடங்களிலும் கஞ்சிக்கொட்டில் அமைத்து, முள்ளிவாய்க்கால் கஞ்சியை முடிந்தவரை அனைவருக்கும் வழங்கி, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வோம். 

நினைவுகளின் நீட்சியே தமிழினவழிப்பின் சாட்சி, இச்சாட்சியே எம்மக்களுக்கான மீட்சியின் வழியென உணர்ந்து  உணர்வுபூர்வமாக மே18 தமிழின அழிப்பு நாளை நினைவுகூருவோம். 

Source

Leave a Comment


To prove you're a person (not a spam script), type the security word shown in the picture.
You can enter the Tamil word or English word but not both
Anti-Spam Image