காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் பல முறைப்பாடுகளும் தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் 21 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காணாமல் போனோரில் 15 ஆயிரம் பேர் சிவிலியன்கள் என அதன் தலைவர் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த தெரிவித்தார். இதேவேளை, இராணுவம் மற்றும் ஏனைய பிரிவுகளில் ஆறாயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டார். தேசிய வானொலியில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் கருத்துத் தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
