காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் 15ஆம் திகதியே ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மாதம் 28ஆம் திகதி சேவை தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டபோதும் அது தற்போது பின்தள்ளப்பட்டுள்ளது.
இந்தப் படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ‘இந்துஸ்ரீ’ படகுச் சேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.நிரஞ்சன் நந்தகோபன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே 4 மணி நேரங்களைக் கொண்ட இந்தப் படகுச்சேவைக்கு இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் திகதியளவில் சேவை ஆரம்பமாகும். காரைக்கால் துறைமுகத்தின் ஒப்புதலுக்காக தற்போது காத்திருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் கப்பல் சேவையில் பணியாற்றவுள்ள கப்பல் கப்டன் மற்றும் ஆறு பணியாளர்கள் அனைவரும் இந்தியர்களாவர். கப்பல் சேவை இந்தியக் கொடியின் கீழ் நடத்தப்படும். சேவையில் ஈடுபடவுள்ள கப்பல் சிங்கப்பூரில் இருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் சர்வதேச கடல்சார் தர நிர்ணயங்களைக் கொண்டது எனவும் நந்தகோபன் குறிப்பிட்டார்.
பயணிகள் கப்பல் சேவைக் கட்டணமாக 50 அமெரிக்க டொலர் மற்றும் வரி அறவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 120 முதல் 150 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள் தலா 100 கிலோ பொருள்களைக் கொண்டு செல்ல முடியும்.
இந்தப் படகில் பயணிகளுக்கான உணவகம் ஒன்றும் இயங்கும். கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு முதல் 3 மாதங்களுக்கு வரி இல்லாத பயணிகள் சேவையை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
TL