கால்நடை வளங்கள் துறையை மறுசீரமைப்பதற்கான விசேட குழுவொன்று நியமனம்

கால்நடை வளங்கள் துறையை மறுசீரமைப்பதற்கான குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்தத் துறையை தற்சமயம் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பது இதன் நோக்கமாகும். கால்நடை வளங்கள் துறைசார்ந்த உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார். முட்டை, கோழி இறைச்சி என்பவற்றின் விலை அதிகரிப்பு, உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவற்றைக் கருத்திற் கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். மில்கோ, தேசிய கால்நடை வளங்கள் சபை என்பனவற்றை ஒரே நிறுவனமாக இணைத்து, ஒரே தலைவர் மற்றும் ஒரே பணிப்பாளர் சபையின் கீழ் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு ரஷ்யாவில் சிறந்த சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்காக ரஷ்யாவின் தொழில்நுட்பங்களும், மூலோபாயங்களும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன. ரஷ்யாவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது, அமைச்சர் மஹிந்த அமரவீர இதுபற்றி கருத்து வெளியிட்டார்.
