கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் தேசிய வேலைத்திட்டம்

நாட்டின் செல்வங்களை வீணடிக்காது, கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டங்களில் சகல தரப்புக்களையும் ஒன்றிணைத்து, பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பிரச்சினைகளை மாத்திரம் கூறாது, நாட்டின் தேசிய நலனுக்காகவும், மக்களின் நலனோன்பு வேலைத் திட்டங்களுக்காகவும் செயற்படுவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார்.
நாராஹென்பிட்டியில் அமைந்துள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் உரையாற்றினார். கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை கிராமிய பொருளாதார புத்தெழுச்சி கேந்திர மையங்களாக வலுவூட்டும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். பிரதமரின் எண்ணக்கருவுக்கு அமைய, அரச நிர்வாக உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. துறைசார் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் கண்காணிப்பின் கீழ், இது முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
