கடற்படை குத்துக்கரணம்
கச்சதீவில் பணிபுரியும் கடற்படையினரில் பெரும்பான்மையானவர்கள் பௌத்தர்கள் என்பதால், அவர்களின் வழிபாட்டுக்காகவே ஒரு சிறிய புத்தர் சிலையொன்று கடற்படையினரின் இல்லத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது= இவ்வாறு கடற்படையினர் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கச்சதீவில் எந்தவொரு புத்தர் சிலையும் வைக்கப்படவில்லை என்று கடற்டை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில், இப்படியொரு அறிவிப்பை கடற்படையினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.
கடற்படையினரின் அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கச்சதீவின் பாதுகாப்புக் கருதி கடற்படைக் குழுவொன்று அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது. இந்தக்கடற்படைக் குழுவினர் பாதுகாப்பு கடமைகளுக்கு மேலதிகமாக, இலங்கை கடற்படை பௌத்த சங்கத்தின் பூரண பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தையும் பாதுகாத்து வருகின்றனர். இந்தத்தேவாலயமானது வருடாந்தப் பெருவிழாவின் போது மாத்திரமல்லாது தினமும் சுத்தம் செய்யப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, மிகுந்த பக்தியுடன் கடற்படையினர்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இந்தத் தேவாலயத்தைத் தவிர, இந்த தீவில் வேறு எந்த நிரந்தரக் கட்டுமானமும் செய்ய முடியாது என்பதால் கடற்படையினர் தற்காலிகமாகக் கட்டப்பட்ட இராணுவ இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர, இந்தத் தீவில் வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை, எதிர்காலத்தில் எந்த ஒரு விகாரையையும் கட்ட கடற்படை முயற்சி செய்யாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
TL