முல்லைத்தீவிலுள்ள குருந்தூர் மலையை முஸ்லிம்களும் உரிமை கோருவதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
வவுனியா வெடுக்குநாறி மலைக்கு நேற்றுக்காலை சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஆலய விடயத்தில் நீதிமன்ற உத்தரவு இருப்பதால் அதனை மீறி நாம் செயற்படமுடியாது. தொடர்ச்சியாக இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல கோவில்களுக்கு ஆவணங்கள் இல்லாத நிலை இருக்கிறது. இது ஒரு குறைபாடு. இதற்கு உரிய திணைக்களம் ஒத்துழைக்காமையும் ஒரு காரணம். இது தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசி ஆவணத்தைப் பெற்று இந்தக் கோவிலை மக்கள் கையில் ஒப்படைப்பதே எமது நோக்கம். இந்து என்ற ரீதியில் நான் இங்கு வரவில்லை. இலங்கையர் என்ற அடிப்படையிலேயே நாம் வந்தோம். தலதாமாளிகைக்கும் நாங்கள் உதவி வழங்கியுள்ளோம். பள்ளிகளுக்கும் வழங்கியுள்ளோம்.
குருந்தூர் மலையைப் பொறுத்தவரை இஸ்லாமியர்களும் சொந்தம் கொண்டாடுகின்றார்கள். சிங்களவர்களும், தமிழர்களும் சொந்தம் கொண்டாடுகின்றார்கள். அதன் வரலாற்று ஆவணங்கள் தயாரிக்கப்படாமையே அதற்கான காரணமாகவுள்ளது. இவற்றைச் சீர் செய்வதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை=என்றார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன், இதொகாவின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன், கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள், பாபு சர்மா உட்பட பலர் அங்கு சென்றிருந்தனர்.
TL