சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து நாட்டை கட்டியெழுப்பப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி

அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கி நாடு எதிர்நோக்கியுள்ள சமூக பொருளாதார அரசியல் சவால்களை முறியடிப்பதற்கு புதிய பாதையில் பயணிப்பது தமது இலக்கு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மல்வத்து மகாவிகாரை மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மல்வத்தைப் பீடத்தின் மஹாநாயக்கரையும் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்கரையும் சந்தித்து ஆசி பெற்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முற்பகல் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீP தலதா மாளிகைக்கும் விஜயம் செய்து, வழிபாடுகளில் ஈடுபட்டார்.
2023 அல்லது 2024ஆம் ஆண்டை அடையும் போது பொருளாதார நெருக்கடி முழுமையாக இல்லாது போகும் என எதிர்பார்ப்பதாக, அவர் கூறினார். குறுகிய காலத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு, சமூக அபிவிருத்தி, சுகாதாரம் மற்றும் கல்வித்துறைகளில் அபிவிருத்தி மேற்கொள்வது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டை புதிய பாதையில் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் கட்சிகள் சிலவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டை கட்டியெழுப்பம் சவாலில் சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய காலம் ஏற்படடிருப்பதாகவும்; அவர் கூறினார்
