சட்டக்கல்லூரி பரீட்சை விடயத்தில் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்மானம் மேற்கொள்வதாக அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவிப்பு

மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை படிப்படியாக முன்னெடுப்பதாக ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்றை பாராளுமன்ற விவாதத்தின் போதே அவர் இதனை கூறினார். எனினும் எதிர்க்கட்சி மக்களின் நெருக்கடி நிலையினை பயன்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைப்பதற்காகவே தான் அரசாங்கத்துடன் இணைந்ததாக அவர் தெரிவித்தார். இதன்படி எரிபொருள், கேஸ் உள்ளிட்ட பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார கூறினார்.
வரி முறைமையினை இலகு படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். சுங்கம் மற்றும் மதுவரிச்சட்டம் தொடர்பில் புதிய விதி முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். வரிச் சலுகை வழங்கப்பட்டாலே நாட்டிற்கு முதலீடுகளை கொண்டுவர முடியும் என்று அவர் கூறினார்.
இறக்குமதிக்கு வரையறை விதிக்கும்போது உற்பத்திகளை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் இசுரு தொடங்கொட தெரிவித்தார்.
போசாக்கு குறைபாட்டிற்குத் தீர்வாக, பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு போசாக்கு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார். முதியோர் கொடுப்பனவு, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு போன்றவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தியர்கள் சுற்றுலா விசாவில் இலங்கை;க்கு வருகை தந்து தொழில்களில் ஈடுபடுவது எதிர்காலத்தில் பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இன்றைய பாராளுமன்ற விவாதத்தில் தெரிவித்தார்.
சட்டக்கல்லூரி பரீட்சையினை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதற்கு மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை மறு சீரமைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமான் தெரிவித்தார். ஆங்கில மொழில் மாத்திரம் பரீட்சை நடத்தும் தீர்மானத்தினால் கஷ்ட பிரதேச மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். குறித்த பரீட்சையினை ஆங்கில மொழியில் மாத்திரம் நடத்துவதாயின் நான்கு அல்லது ஐந்து வருட கால அவகாசம் வழங்கி அதன் பின்னர் அந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தலாம் என்றும் ;பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரகுமான கேட்டுக்கொண்டார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானியினாலேயே குறித்த பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார். இது பற்றி மாணவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றனர். ஆகையினால் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தீர்மானம் மேற்கொள்வதாக அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ கூறினார்.
உலகளாவிய ரீதியில் பொருந்தும் வகையில் சகல துறைகளிலும் ஆங்கில மொழியினை இணைத்துக்கொள்ளும் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பல்கலைக்கழங்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மொழி தொடர்பான ஆளுமை இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
