சட்டவிரோதமான முறையில் கைத்தொலைபேசிகளை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்க திட்டமிட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிற்றிய தெரிவித்துள்ளார். கைத்தொலைபேசி இறக்குமதியாளர்களுடன் நிதியமைச்சில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது அவர் இதுபற்றிக் கருத்து வெளியிட்டார். சட்டவிரோதமான முறையில் கைத்தொலைபேசிகளை நாட்டிற்குத் தருவிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு பாரிய அளவிலான வரி வருமானம் கிடைப்பதில்லை என்று ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் சகல கைத்தொலைபேசிகளும் இலங்கை தொலைதொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்படவுள்ளன. தொலைபேசிகளின் ரகசியக் குறியீட்டு இலக்கத்தின் மூலம் இந்தப் பதிவு மேற்கொள்ளப்படுகின்றது. சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு இந்த ரகசியக் குறியீட்டு இலக்கம் உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.