எந்தவொரு சமூகத்தின் நலத்திற்காகவும், நிர்வாகம், நீதித்துறை, போன்றவற்றை போன்று, ஊடகமும் முக்கிய பங்கு வகிப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் சுதந்திரமாக தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்பங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கம் அந்தப் பொறுப்பை நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் கருத்து வெளியிட்டார். இன்று உலக ஊடக சுதந்திர தினமாகும். அரசாங்கத்தை விமர்சிப்பது தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கு எதிராக செயற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுங்க நடவடிக்கைகளுக்காக அவுஸ்திரேலிய எல்லைப் படையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இறக்குமதி-ஏற்றுமதி சர்வதேச வர்த்தகத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார். லக்சம்பர்க் நகருடன் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடவும் அமைச்சர்கள் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இந்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கைச்சாத்திடவுள்ளனர். அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், வர்த்தகம், கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் கூறினார்.
2003ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நுகர்வோர் அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை எடுப்பதில் உள்ள சட்ட சிக்கல்களை மாற்றுவதற்கு தேவையான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான பூர்வாங்க சட்டமூலம் தயாரிக்கப்பட்டு, அதனை சட்டமாக மாற்றுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச மற்றும் பகுதியளவிலான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் தாங்கள் போட்டியிடும் தேர்தல் பிரிவு தவிர, ஏனைய உள்ளுராட்சி பிரிவுகளில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, அவர்களுக்கு உரிய அடிப்படை சம்பளம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன இந்த யோசனையை முன்வைத்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் திகதி பிற்போடப்பட்டமையினால் அந்த அரச உத்தியோகத்தர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதன் பின்னர், குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்தார்.