சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்காக இந்தமுறை வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 85 கோடி ரூபா ஒதுக்கம்

அடுத்தாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மொத்த அரச செலவீனத்தில் சுமார் 85 கோடி ரூபா சமூக நலன்புரித்திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாபிற்றிய தெரிவித்துள்ளார். வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மே;றகொண்டுள்ளது. அதன்படி, தற்சமயம் ஐந்து லட்சத்து 78 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகின்றது. பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த ஜனவரி மாதம் ஆரம்பமாகும். ஏப்பிரல் மாதத்தில் இருந்து கொடுப்பனவு வழங்கப்படும் என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
சமுர்த்திக் கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, நீரிழிவு நோயாளர்களுக்கான நிதியுதவி போன்ற வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். சமுர்த்தி, முதியோர், நீரிழிவு நோயாளர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அந்த நிவாரணம் மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதற்காக தற்சமயம் ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக நான்காயிரத்து 300கோடி ரூபா புதிய வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்சமயம் சமுர்த்திக்கொடுப்பனவாக 420 ரூபாவில் இருந்து நான்காயிரத்து 500 ரூபா வரையில் கொடுப்பனவைப் பெறுபவர்களுக்கு எதிர்வரும் 4 மாதங்களுக்கு குறைந்த பட்சம் 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. அதற்காக 2 ஆயிரத்து 70 கோடி ரூபா ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
விவாத்தில் பங்கேற்ற ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, முதலீடுகளை மேம்படுத்துவதற்காக கவர்ச்சிகரமான நிவாரணப் பொதிக்ள எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார். கிராமிய இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களும் பல வகுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அரச கட்டடங்கள் தேவைப்படுமாயின் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் தயார். இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு முதலீட்டுச் சபை வசதிகளை வழங்கும் என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
