சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் பற்றிய பாராளுமன்ற விவாதம் இன்று ஆரம்பமானது. நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டிற்கு அமைய, குறைந்த வருமானம் பெறுவோரை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் அரசாங்கம் வழங்கும் என்று அவர் கூறினார்.
கிராமிய உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான சவால்களை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் இம்முறை பெரும்போகத்தில் கூடுதலான அறுவடைகளை வழங்கியுள்ளார்கள். கடந்த ஏழு மாதங்கள் நெருக்கடியான காலப்பகுதியாக இருந்தாலும், அரச தனியார் தொழில்துறைகளை பாதுகாக்க முடிந்தது. தொழில்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
சகல இளைஞர்களுக்கும் தொழிற்பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தேவையான வசதிகளை வழங்குவது பற்றி இந்த ஒப்பந்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். நெருக்கடியாக சந்தர்ப்பங்களில் பெரும்பாலான ஆசிய நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியம் தற்சமயம் வழங்கும் ஒத்துழைப்பை எதிர்காலத்தில் வளமாக்குவதற்காக பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
மதுபானம், புகையிலை என்பனவற்றின் மூலம் கூடுதலான வரியை அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளார். புகையிலை, பீடி இலை என்பனவற்றிற்கு 70 சதவீதமான வரி அறவிடப்படுகிறது. இதே போன்று கெசினோ உட்பட சூதாட்டங்களுக்கான வரியும் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய மேலும் தெரிவித்தார்.