சர்வதேச நாணய நிதியத்தின் மானியத்தை இந்த மாத இறுதிக்குள் நாடு பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான அனைத்து பணிகளையும் அரசாங்கம் ஏற்கனவே நிறைவு செய்துள்ளது. கடுமையான நெருக்கடியான காலகட்டத்தை கடந்துள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை கட்டமைக்கப்படுகிறது. பணவீக்கம் குறைந்துள்ளது. நாட்டில் வரிசை சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. நெருக்கடியான காலத்திலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது மன்னிப்பு கோரினார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
உரங்களை தடையின்றி வழங்குவதன் மூலம், சிறுபோகம் மற்றும் பெரும்போகங்களில் வெற்றிகரமான அறுவடை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் விவசாய பொருட்களின் ஏற்றுமதி இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. வீழ்ச்சியடைந்த சுற்றுலாத் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் கடுமையான பல பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொருளாதாரத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படும் அதேவேளை, சமூகத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.