சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் 1857ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. நகரில் இயங்கிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியர்கள் அதன் நிர்வாகத்திற்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் இந்தத் தினத்தைப் பிரகடனம் செய்ய வழிவகுத்தது. 1910ஆம் ஆண்டு டென்மார்க்கில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது சமர்ப்பிக்க யோசனைக்கு அமைய மார்ச் மாதம் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். 1911ஆம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி தொடக்கம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கை 1978ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.
முகாமைத்துவம், அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்கும் பொறிமுறைகள் என்பனவற்றில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டு வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் மாத்திரம் இன்றி அரச, தனியார் துறைகளிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகளில் பெண்களின் நேரடியான பங்கேற்பை உறுதிப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவி டொக்டர் சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.