உலக நாடுகளில் உள்ள அனைத்து சமூகமும் இலங்கைக்கு உதவத் தயார் என அறிவித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளால், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான சிறந்த வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதை நிறுத்தியிருந்த அனைத்து வங்கிகளும் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வங்கிகள் ஒவ்வொன்றும் கடந்த வாரத்திலிருந்து இலங்கையின் வங்கிகளுடன் பரிவர்த்தனைகளை ஆரம்பிக்க எடுத்த தீர்மானம் நாட்டை மீட்பதற்கான முதல் வெற்றி என பிரதமர் குறிப்பிடுகிறார். நேற்றைய தினம் மஹரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான விதிகள் மேலும் தளர்த்தப்படும். வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் வெற்றிபெற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். குறைந்த வருமானம் பெறுவோர் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டம் நிறைவடைந்தவுடன், அவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிக்க சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் குணவர்தன தெரிவித்தார்.