சர்வ கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க, தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவது முக்கியமாகும். அடுத்த வருடத்திற்குள் நாட்டிற்கு சிறந்த நிலைமையை ஏற்படுத்த முடியும். அதேபோல் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அனைவருடனும் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவது தனது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தான் பிரதமராக பதவியேற்ற போது ஒரு நாளைக்கு ஐந்து மணித்தியாலங்கள் மின்வெட்டு காணப்பட்டது. தற்போது அது 3 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டுள்ளது. எரிவாயு நெருக்கடிக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை தீர்ப்பதற்கும் முறையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
