சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை

சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மிகக் குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இது குறித்து நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவான தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்பில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம், வணிக, வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிகார மற்றும் துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
